பிரணாப் முகர்ஜி அறிக்கையை கருணாநிதி வரவேற்றுள்ளார்

இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது தனக்கு மன ஆறுதலை அளிப்பதாகவும், இப்போதாவது இந்த வேண்டுகோளுக்கு இலங்கை அரசு செவிமடுக்கவேண்டுமென்றும் தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தண்டுவட அறுவைச்சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பிய கருணாநிதி, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு முன்வரவேண்டும், போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களுக்கு மருத்து வசதி அளிக்கப்படவேண்டும், அதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என்றெல்லாம் கூறி; இலங்கைத்தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழும் வகையில் அதிகாரப்பகிர்வு வேண்டும் என நேற்று துத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியதும், பின்னர் அதை அறிக்கையாக வெளியிட்டதும், இலங்கைப் பிரச்சினையில் தான் இதுவரை எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு ஒரு வெற்றி எனக்கூறி உள்ளார்.

அதே நேரம் இலங்கைப் பகைவர்களின் படங்களை விட்டுவிட்டு இந்தியத் தலைவர்களின் படங்களுக்கு தீயூட்டுபவர்களை தேசப் பாதுகாப்புக்கான சட்டங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா எனவும் கருணாநிதி மேலும் கேட்டிருக்கிறார்.

நேற்று துத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவப் படத்திற்கு தீ வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையே அவ்வாறு தமிழக முதல்வர் எச்சரித்திருக்கிறார் என கருதப்படுகிறது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் வழக்கத்திற்கு மாறாக வைகோவும் அவரது ஆதரவாளர்களையும் 15 நாள் நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டது, அவ்வாறே மாஜிஸ்ட்ரேட்டும் உத்திரவிட்டார்.

பொதுவாக இத்தைகய ஆர்ப்பாட்டங்கள் போது காலையில் கைதும் மாலையில் விடுதலையுமே வழக்கம். ஆனால் இப்போது 15 நாள் காவலே தமிழக அரசின் அணுகுமுறையில் சற்றுக் கடுமையைக் காண்பிக்கிறது. தவிரவும், இன்னொரு விடுதலைப்புலி ஆதரவாளரான திரைப்பட இயக்குநர் சீமான் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply