தெரிவுக்குழு பக்கச் சார்பானதல்ல கூட்டமைப்பு தெரிந்து கொள்ளலாம் : தினேஷ் குணவர்த்தன
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு முன்னதாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தற்போது அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் தெரிந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேர்மையான முறையில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து புதிய இலங்கையை கட்டியெழுப்ப தமது பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
31 பேர் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகளுக்கு 14 பிரதிநிதிகளுக்கான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தெரிவுக்குழு பக்கச்சார்பானது என்று கூறவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான ஜனாதிபதியின் அழைப்புத் தொடர்பிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேர்மையான முறையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே புதிய இலங்கையை கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எதிர்க்கட்சிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த காலங்களில் இணைந்து செயற்பட்டுவந்துள்ளார். குறிப்பாக தனக்கு எதிராக செயற்பட்டவர்கள் தனது பதவிக்கு சவால்விட்டவர்கள் என அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தற்போது இணைந்து செயற்பட்டுவருகின்றார்.
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி
அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருகின்றார். குறிப்பாக நாட்டின் ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி அதிக அக்கறை செலுத்தியுள்ளார். வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக அதிக நிதியை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார்.
இதேவேளை தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. அந்தத் தெரிவுக்குழுவானது எவ்வகையிலும் பக்காச்சார்பானது அல்ல . அவ்வாறு பக்கச்சார்பானது என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது நம்பிக்கை இல்லாவிடின் தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை அறிந்துகொள்ள முடியும்.
கூட்டமைப்பு நம்பகத்தன்மை மற்றும் நேர்மை குறி்த்து பேசுகின்றது. அப்படியாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு முன்னதாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தற்போது அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நம்பகத்தன்மை மற்றும் நேர்மை வெளிப்படைத்தன்மை தொடர்பில் தெரி்ந்துகொள்ள முடியும்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது பக்கச்சார்பானது என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு 31 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதில் எதிர்க்கட்சிகளுக்கு 14 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தில் இருந்தும் இவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை பக்கச்சார்பானது என்று ஒருபோதும் கூற முடியாது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு நம்பிக்கையுடன் வரலாம். தற்போது அவர்களுக்கான ஆசனங்கள் வெறுமையாகவே உள்ளன என்றார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply