தமிழ் அரசியல் கைதிகளுக்காக வழக்காட நவோதய மக்கள் முன்னணி இலவசத்திட்டம்; உறவினர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோருகிறார் : கிருஷ்ணா

நிதி நெருக்கடியால் வழக்குத் தொடரமுடியாமல் நீண்ட நாள்களாக சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உதவுவதற்கு நவோதய மக்கள் முன்னணி முன்வந்துள்ளது. இதன் பிரகாரம், தமது விடுதலையின் நிமித்தமோ அல்லது பிணை வேண்டியோ வழக்குத் தொடரவிரும்புவோருக்கு சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்துகொடுப்பதற்கான திட்டத்தை குறிப்பிட்ட அமைப்பு 2014 புத்தாண்டு முதல் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.எனவே, சிறைச்சாலைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களோ நவோதயா மக்கள் முன்னணியின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முன்னணியின் தலைவர் கலாநிதி எஸ்.கே. கிருஷ்ணா உதயனுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலேயே இந்த முடிவு  எடுக்கப்பட்டது என்றும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தல் மற்றும் நவோதயாவின் இலவசக் கல்வித் திட்டம் ஆகியன தொடர்பிலும் உயர்பீடக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெறுமனே ஆர்ப்பாட்டங்களை நடத்துவ தால் மட்டும் பயனில்லை. அறிக்கைகள் விடுவதாலும் உணர்ச்சி பொங்க வீரவசனங்கள் பேசுவதாலும் அவர்களின் பிரச்சினைகள் தீரப் போவதுமில்லை. இந்த உண்மையை தமிழ்க் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த விடயத்தை நாம் புத்திசாதூர்யமாக கையாள வேண்டும். அத்துடன், நடைமுறைக்கு சாத்தியமானவற்றை செய்வதன் மூலமே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

இதன் நிமித்தமே சட்டரீதியான உதவிகளை வழங்குவதற்கு நவோதய மக்கள் முன்னணி முன்வந்துள்ளது – என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply