ஆப்கானிஸ்தானில் கிறிஸ்துமசை கொண்டாடும் இங்கிலாந்து ராணுவத்தினர்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அரசுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் ஐ.நா படைகள் கடந்த 2001 ஆம் ஆண்டில் அங்கு பாதுகாப்புப் பொறுப்பை மேற்கொண்டன. இந்த படையில் 5,000 க்கும் மேற்பட்ட இங்கிலாந்தின் வீரர்களும் பங்கு கொண்டனர். சரியாக 13 வருடங்கள் கழிந்த நிலையில் வரும் 2014 ஆம் ஆண்டில் ஐ.நா படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பூரணமாக விலக முடிவு செய்துள்ளன.பாதுகாப்பு பொறுப்பினை ஆப்கனிஸ்தானின் காவல்துறை ஏற்றுள்ள நிலையில் அவர்களுக்குத் துணையாகவே இந்த வீரர்கள் பாதுகாப்புப் பொறுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மான்ட் மாகாணத்தில் பணியில் ஈடுபட்டுள்ள 5,200 வீரர்களும் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ஆனால் இவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சிகளும், அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன் முகாமில் உள்ள கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. இந்த முகாமிலும் மற்றும் நான்கு புறநகர்த் தளங்களிலும் இந்த வீரர்களுக்கான மதிய விருந்து அளிக்கப்படும். பிரார்த்தனைகளுக்கும், வீட்டிற்குத் தொலைபேசியில் பேசவும் இந்த வீரர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன் பாஸ்டன் முகாமிற்கு வருகை தந்தார். அப்போது தங்கள் வீரர்கள் ஆப்கானிஸ்தான் வந்த பணி முடிவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டிற்குத் தேவையான அடிப்படையை அமைதியை ஐ.நா வீரர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர் என்றும் பயங்கரவாதத்தின் புகலிடமாக ஆப்கன் மாறுவது தடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடும் வீரர்கள் தங்களின் பணி குறித்து பெருமிதம் கொள்ளலாம் என்று ஹெல்மண்ட் பிரிவின் கமாண்டர் பிரிகேடியர் ஜேம்ஸ் வுட்ஹாம் தெரிவித்தார். தங்களின் வீரர்கள் அருமையாகப் பணியாற்றி வருகின்றார்கள் எனவும், ஆப்கனின் சக அதிகாரிகள் இவர்களின் உறுதிப்பாடு, பணித்திறமை மற்றும் ஈடுபாடு போன்றவற்றிற்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதாகவும் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply