மகா.தமிழ்ப் பிரபாகரனின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்மோகனிடம் கோரிக்கை

இலங்கை ராணுவம் கைது செய்துள்ள தமிழக செய்தியாளரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஃபேக்ஸ் மூலம் அனுப்பிய கடிதத்தில், “சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தையோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, (25.12.2013) பகல் 1.30 மணி அளவில், இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

மூவரையும் கைது செய்த ராணுவத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனையும், பசுபதி பிள்ளையையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.

செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால், இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை; உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும்.

சண்டே டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை ராணுவம் மற்றும் பொலிஸாரால் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன்.

தாங்கள் உடனடியாக நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply