குற்றச் செயல்களை தடுப்பதில் பொலிஸ் நடவடிக்கை போதாது; மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி
யாழ்.குடா நாட்டில் பரவலாக இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. மணல் கடத்தல், போதைப்பொருள் விற்பனை என்பன தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்று நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விசனம் வெளியிடப்பட்டது.இவற்றைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் குறித்த இடங்களில் தற்காலிக பொலிஸ் சாவடிகளை அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனப் பிரதேச செயலர்களால் தெரிவிக்கப்பட்டது.
அரியாலை கிழக்கு, ஊர்காவற்றுறை, மண்கும்பான், மிருசுவில் – பாலாவி, வடமராட்சி உட்பட பல பிரதேசங்களில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. மருதங்கேணியில் கண்டல் தாவரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விறகுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
பொன்னாலை, ஊர்காவற்றுறையில் சட்டவிரோதமாகப் பனைகள் தறிக்கப்பட்டுக் கடத்தப்படுகின்றன. மாதகலில் அதிகளவான கஞ்சா அண்மையில் மீட்கப்பட்டது. சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை தொடர்கிறது எனப் பல விடயங்கள் நேற்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.
இவற்றைத் தடுப்பதற்குப் பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானளவாக இல்லை எனவும் அங்கு குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இனங்கண்டு பொலிஸாருக்கு தகவல் கூறினால் அந்த இரகசியம் பொலிஸார் மூலமாகவே வெளியே கசிய விடப்படுவதால் இவ்வாறு தகவல் வழங்குபவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பொலிஸார் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி எவரும் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முடியும். தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் எதுவுமே வெளியிடப்படமாட்டாது என்று உறுதியாகக் கூறினார்.
தற்காலிக பொலிஸ் சாவடிகள் அமைப்பது பற்றி சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply