தெற்கு சூடானில் ஆப்பிரிக்கத் தலைவர்கள்: வன்முறையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி
தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானிலிருந்து பிரிந்து தனி நாடு என்ற அந்தஸ்தினைப் பெற்றது. கடந்த வாரம் இந்த நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரால் தூண்டிவிடப்பட்ட அரசு எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனை முறியடிக்க அந்நாட்டின் அதிபர் சல்வார் கிர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நீடித்து வருகின்றது. முன்னாள் துணை அதிபர் சதி முயற்சியின் மூலம் வன்முறையைத் தூண்டி விட்டு நாட்டை அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றார் என்று அதிபர் சல்வார் கிர் குற்றம் சாட்டி வருகின்றார்.
எனவே இந்த இரு தலைவர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் நேற்று ஆப்பிரிக்கத் தலைவர்கள் சூடானுக்கு வந்துள்ளனர். கென்யாவின் அதிபர் உரு கென்யாட்டாவும், எதியோப்பியாவின் பிரதமர் ஹைலேமரியம் டஸ்லெகனும் அதிபர் சல்வார் கிர்ரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், முன்னாள் துணை அதிபர் தனது கிளர்ச்சியைக் கைவிட்டால்தான் அரசு அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சருடன் தங்களது அரசு இன்னும் முறையாகத் தொடர்பு கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட தகவல் தொடர்பு அமைச்சரான மைக்கேல் மக்யுயி லியுத் தாங்கள் அவருடன் பேசப்போவதில்லை என்றும் கூறினார். மச்சரின் தொலைபேசி எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. அவருடைய இருப்பிடமும் யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
நாட்டின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளான யூனிட்டி மற்றும் அப்பர் நைல் ஸ்டேட் பகுதிகளில் உள்ள நகரங்களிலிருந்து புரட்சியாளர்களை விரட்டும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. ஏனெனில் இங்கு தொடரும் வன்முறைகளும், அமைதியின்மையும் நாட்டின் உயிர் நாடியான பொருளாதார வளத்தைப் பாதித்து விடக்கூடும் என்ற அச்சம் அரசுக்குத் தோன்றியுள்ளதே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply