ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தடையை தவிர்க்கமுடியாதிருக்கும் :திஸ்ஸ விதாரண
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் .சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.கட்சியின் 78ஆவது வருடாந்த கூட்டம் ருவான்வெல்ல என்.என்.பெரேரா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் கூறுகையில்
அடுத்த வருடத்தில் இடம்பெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்பதாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமேயானால் பேரவையின் உறுப்பு நாடுகளது ஆதரவு எமக்கு கிடைக்கும் என்பதில் ஐயப்படத்தேவையில்லை.
ஏனெனில் இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் கேள்விகளும் எழுப்பப்படவுள்ளன. இதற்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது ஆகவே இதற்கு முன்பதாக அரசாங்கம் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில் எமது நாட்டின் மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை தவிர்க்க முடியாதிருக்கும்.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற பிரித்தானியா 1940 காலப்பகுதிகளில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. ஆகவே பிரித்தானியா தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மேற்குலக நாடுகள் முன்வருமா என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது.
இப்படி இருக்கும் போது எமது நாட்டின் மனித உரிமை குறித்து பிரித்தானியா கேள்வி எழுப்புவது எந்த விதத்தில் நியாயமானது என தெரியாதுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சர்வதேச நாடும் கேள்வியெழுப்புவதாகவில்லை. இதனால் அவை சிறிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சி செயற் பட்டு வருகின்றது. இந்நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திவிட வேண்டுமென்பதே அமெரிக்காவின் நோக்கமாகும் இருப்பினும் இடதுசாரிகளாகிய நாம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply