இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் சென்னை திரும்பினார்
இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் அனுமதியின்றி ராணுவ முகாம்கள், போரில் சேதம் அடைந்த பகுதிகளை படம் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்பிரபாகரன் என்பவரை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். விசாரணையில் தமிழ் பத்திரிகையாளரான அவர், சுற்றுலா விசாவில் அங்கு சென்றது தெரியவந்தது.தமிழ்பிரபாகரனை சிங்கள பத்திரிகைகள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று விமர்சனம் செய்தன. பின்னர், இலங்கை குடியுரிமை அதிகாரிகளிடம் தமிழ்பிரபாகரன் ஒப்படைக்கப்பட்டார். மேலும், அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
இதற்கிடையே நேற்று அவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இதுகுறித்து இலங்கை போலீஸ் அதிகாரி அஜித்ரோஹனா கூறுகையில், ‘உள்ளூர் நேரப்படி மாலை 6.40 மணிக்கு அவர் சென்னை செல்லும் விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் நாடு கடத்தப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டியதில்லை. இதன்மூலம் இலங்கை மீதான அவதூறு பிரசாரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 8.30 மணிக்கு தமிழ்பிரபாகரன் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் இலங்கையில் உள்ள வடகிழக்கு மாகாணங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தேன். அப்போது சாதாரணமாக அங்குள்ள இடங்களை படம் எடுத்தேன். எந்த பகுதியிலும் நான் அத்துமீறி செயல்படவில்லை. படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் என்னை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது நான் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளன் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் கைவிலங்கிட்டு சிறையில் அடைத்தனர். 2 நாட்களாக என்னை தூங்க விடாமல் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவில் இருந்து தமிழர்கள் யார் சென்றாலும் அவர்களை விடுதலைப்புலிகளாகவே பார்க்கிறார்கள். அங்கு இந்தியர்கள் என்றாலே மரியாதை கிடையாது. மேலும் பல உண்மை விஷயங்களை ஓரிரு நாட்களில் உங்களிடம் தெரியப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply