ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது : அமைச்சர் சம்பிக்க ரணவக்க
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். இந்தச் சூழலில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்துவது உலகளாவில் அந்நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். இதற்கு முன்பும் இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகித்துப் பிரபாகரனைப் பாதுகாத்தது. அதே செயலை இன்றும் செய்வதற்கு முனைந்தால் 1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிக்கும். இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு. எனவே எமது பிரச்சினையில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை. அவர்களது ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. இந்த மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் நாம் கவலைப்படப் போவதில்லை. எம்மை அசைக்க முடியாது. சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் ஆதரவு எமக்கு இருக்கின்றது.” இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply