T.N.A. ஒருபோதும் முஸ்லிம் மக்களை அடக்கி ஆழ நினைக்கவும் இல்லை :கிருஸ்ணபிள்ளை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முஸ்லிம் மக்களை அடக்கி ஆழ நினைக்கவும் இல்லை நினைக்கப் போவதும் இல்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாரம்பரியமாக இருந்த உறவினையும், தற்போது இருந்துவரும் உறவினையும் அறியாமல் அதனை கொச்சப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளக் கூடாது’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.‘கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையளராக தமிழர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால’ வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
‘முற்பட்ட கால வரலாறு தொடக்கம் இன்று வரை முஸ்லிம் – தமிழ் மக்களின் உறவு சரிவர தெரியாமல் இருப்பதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்கள்மீது வைத்திருக்கும் கரிசனையும் பேரன்பினையும் கபட நாடகம் என உதாசீனம் செய்கின்றனர்.
இந்த நாட்டில் பிரித்தானியரின் ஆட்சி காலத்திலே கண்டியில் சிங்கள – முஸ்லிம் கலவரம் எழுந்தபோது அந்த காலப் பகுதியில் தமிழ் தலைவர்களாக இருந்த சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்தனர். மன்னார் புத்தளம் காலி தீகாவாபி போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக தமிழ் தலைவர்கள் குரல் கொடுத்தனர்.
2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த ஒப்பத்தத்தின் போது முஸ்லிம்களுடன் இணைந்து வடக்கு கிழக்கில் சுயாட்சிக்கு தமிழ் தலைவர்கள் சம்மதித்தனர். இதுபோன்ற இன்னும் பல விடயங்களைப் பற்றி அறிந்திருந்தால் தமிழ் மக்கள் முஸ்லிம்களுடன் வைத்திருக்கும் உறவினை கொச்சைப்படுத்தி கபட நாடகம் என்று கூறியிருக்கமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.
அவ்வாறான உறவுகள் நீடித்த காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடு தனித்து பக்கச் சார்பாகவே அமைந்து சென்றுள்ளது என்பதனையும் இவ்விடத்தில் கூறவேண்டிய தேவையுள்ளது. தமிழ் மக்களுடன் சார்ந்து இருப்பதனை விரும்பாமல் மட்டக்களப்பு நிலத் தொடர்பற்ற கல்வி வலயம் ஒன்றினை உருவாக்கினார்கள். வாழைச்சேனை மத்திய பிரதேச செயலகம் உருவாக்கினார்கள். மட்டக்களப்பில் பேரூந்து சாலை இருக்கத்தக்கதாக ஏறாவூர் காத்தான்குடி போன்ற இடங்களில் தனியான பேருந்து சாலைகள் அமைத்திருந்தனர். மற்றும் ஆதிகாலந் தொட்டு ஆரையம்பதியில் பொதுவான வைத்தியசாலை உள்ள போது காத்தான்குடியில் பிரமாண்டமான வைத்தியசாலை அமைத்தார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனையில் காலங்காலமாக வைத்தியசாலை இருக்கும் போது மடுவத்தையில் அஸ்ரப் வைத்தியசாலை அமைத்தனர். இவற்றுக்கெல்லாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது எந்தவொரு தமிழ் மகனோ எதிர்பு தெரிவிக்கவில்லை என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒற்றுமைக்காக மௌனம் காத்து வருபவர்கள் நாங்கள். இந்நிலையில் மிக அண்மையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவை தரமுயர்த்தக் கூடாது என்பதனை பகிரங்கமாக கூறியதினை இவ்வேளையில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இவ்வாறான பல சம்பவங்கள் இருக்கும் போது தமிழர் இருந்த பதவிக்கு தமிழர் ஒருவரை மீண்டும் நியமிக்க கோரியமை எந்த வகையில் பிழையெனக் கூறலாம் எங்கள் சமூகத்தினை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது. நீங்கள் உங்களது இனத்திற்காக குரல் கொடுத்தால் நீதி. நாங்கள் எங்களது இனத்துக்காக குரல் கொடுத்தால் அது அநீதியா?
பல ஆண்டுகளுக்கு முன்பு கல்முனையில் நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சி மகாநாட்டிலே மசூர் மௌலானவை தலைமைதாங்க வைத்தோம். வடமாகாண சபை தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தினை முஸ்லிம் சார்ந்த ஒருவருக்கு கொடுத்திருந்தோம். இவ்வாறு பதவிகொடுத்த வரலாறே எமக்கு உண்டு. கிழக்கு மாகாண சபையில் பிரிவினை காட்ட வேண்டிய அவசியம் எமக்கில்லை. அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முஸ்லிம்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறி உலகறியச் செய்தார்.
அனைத்தினையும் பிரிவினைக் கண்ணுடன் பார்ப்பவருக்கு அனைத்தும் பிழையாகத்தான் இருக்கும். உலகத்தில் மிகவும் கொடிய ஆயுதம் நாக்கு. அதனை நாம் சரியாக உபயோகிக்க வேண்டும். பல்லுக்கு வெளியே சொல் போனால் அதனை திரும்பிப் பெற முடியாது. எனவேதான் இனிவருகின்ற காலங்களிலாவது புரிந்துணர்வடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply