பேச்சுவார்த்தையின் பின்னரே மீனவர்கள் விடுதலை : ராஜித திட்டவட்டம்

டில்லியில் நாளை  செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்திய-இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகே கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்துள்ளது.தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை உத்தரவிட்டார்.இந்நிலையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறுகையில், “பொங்கலை முன்னிட்டு தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க யோசனை தெரிவிக்கப்பட்டாலும், டில்லியில் ஜனவரி 14-ஆம் திகதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

இரு தரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும், ஒரே நேரத்தில் விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது நாங்கள் விவாதிப்போம்.

மேலும், இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து எங்கள் மீன் வளத்தைச் சுரண்டுவது குறித்தும், அவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத இழுவை மடி வலைகளைக் குறித்தும் இந்திய அதிகாரிகளுடன் பேசுவோம்´´ என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரஜித சேனாரத்னவுடன் இலங்கை கடற்படை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியத் தரப்பில் மீன்வளத்துறையையும் கவனித்து வரும் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இலங்கைச் சிறைகளில் 288 இந்திய மீனவர்களும், இந்தியச் சிறைகளில் 212 இலங்கை மீனவர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply