சிரியாவிற்கு 380 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி: அமெரிக்கா அறிவிப்பு
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சண்டைகளில் ஏராளமானோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபரின் ராணுவம் உபயோகித்த ரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கும் பணியும் துவங்கியுள்ளது.போரினால் பாதிக்கப்பட்டுள்ள 13 மில்லியன் மக்களுக்கு உதவ வேண்டி உலக நாடுகளிடம் 6.5 பில்லியன் டாலர் உதவி கோரி அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து குவைத்தில் இன்று தொடங்கிய கூட்டத்தில் அந்நாட்டின் எமிர் ஷேக் சபா அல்-அஹ்மது அல்-சபா 500 மில்லியன் டாலர் உதவி அறிவிப்புடன் துவக்கி வைத்தார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி 380 மில்லியன் டாலர் உதவித் தொகையினை அறிவித்தார். ஆனால், அதிபர் ஆசாத் மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களுக்கு இந்த உதவி கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு 69 நாடுகள் மற்றும் 24 சர்வதேச அமைப்புகளிலிருந்து உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். சிரிய மக்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகள் உலக சமூகத்தினால் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் ஒரு அரசியல் தீர்வு ஏற்படவும் அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு ஒரு நிரந்தர முடிவு ஏற்படவும் உலக நாடுகள் வழி செய்யவேண்டும் என்றும் ஜான் கெர்ரி குறிப்பிட்டார்.
அமெரிக்கா, குவைத் தவிர சவூதி அரேபியா 260 மில்லியன் டாலர்களும், இங்கிலாந்து 164 மில்லியன் டாலர்களும், கத்தார் 60 மில்லியன் டாலர்களும், ஈராக் 13 மில்லியன் டாலர்களும் மற்றும் பின்லாந்து 7 மில்லியன் டாலர்களும் உதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்தப் பணமானது சிரியாவில் உள்ள மக்களுக்கும் மற்றும் அகதிகளாக அவர்கள் வாழ்ந்துவரும் அண்டை நாடுகளில் அவர்களின் பாராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இதுவரை மொத்தம் 1.7 பில்லியன் டாலர் அளவிலான உதவிகளைச் செய்து சர்வதேச அளவில் ஒரே பெரிய கொடையாளியாக விளங்குகின்றது என்றும் தகவலகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply