ஊடகத் துறையை அரசு நடத்துகின்ற விதம் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது : சுரேஷ்

ஊடகத் துறையை இலங்கை அரசு நடத்துகின்ற விதம் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் என்ற பாகுபாடின்றி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகை விநியோகஸ்தர்களையும் கொன்றுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.யாழ். மீடியா கிளப் என்ற அமைப்பு நேற்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டபோது அந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஊடகத் துறையை இலங்கை அரசு நடத்துகின்ற விதம் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் என்ற பாகுபாடின்றி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகை விநியோகஸ்தர்களையும் கொன்றுள்ளனர்.

இதனால் பல ஊடகவியலாளர்கள் தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான சூழ்நிலை இன்றும் இங்கு காணப்படுகின்றது. ஊடகம் என்பது சுதந்திரமானதும் உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லக் கூடிய தர்மம் மிக்கதாகவும் விளங்குகின்றது. அத் தர்மம் இலங்கையில் இருக்கின்ற ஊடகங்களுக்கு இருகின்றதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

அரச சார்பாக அல்லது முதலாளிசார்பாக அவர்களுடைய சிந்தனையை வெளிக்கொண்டு வருகின்ற சில ஊடகங்களும் இங்கு செயற்படுகின்றன. உதாரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்தால் அவர் தமிழராக இருந்தால் தமிழ்ப் பத்திரிகைகள் தமிழன் கொலை எனவும் ஆங்கிலப் பத்திரிகைகள் இவர் புலியாக இருக்கலாம் எனவும் சிங்களப் பத்திரிகைகள் இவர் புலி எனவும் கூறுகின்றன.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குச் செய்தியைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் தற்பொழுது சிறையிலுள்ளனர். அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று கருதப்பட்ட நபர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் நீதிமன்றத்திற்கு முன்பாகவே நடந்துள்ளதால் பொலிஸார் இதற்கு உடனடியாகவே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே பொதுமக்கள், ஊடகத்துறையினர் என அனைவரும் சுதந்திரமாக வாழமுடியும்.

அதுமட்டுமன்றி இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வு என்பதற்கு உண்மைகளை முதலில் வெளியில் கொண்டு வரவேண்டும். உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படாத நிலையில் தீர்வு என்பது கிடைத்துவிடும் என நாம் கருதவில்லை. அந்த வகையில் சிங்கள மக்களுக்கும் உண்மைகள் தெரியவேண்டும். அந்த உண்மைகள் சிங்கள மக்களுக்கு தெரிகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வலி.வடக்கில் இன்னும் எத்தனை ஆயிரம் மக்கள் குடியேற்றப்படவேண்டியுள்ளனர். அம்மக்கள் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பது சிங்கள மக்களுக்குத் தெரியாது. சிங்கள ஊடகங்கள் இத்தகைய விடயங்களை எடுத்துச் செல்வதில்லை என்பதே உண்மையாகும். உண்மையில் சிங்கள மக்களுக்கு இவ்விடயங்கள் தெரியவந்தால் அரசுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கலாம்.

மக்களுக்கான விடயங்கள் முக்கியமானதா அல்லது இராணுவத்திற்கான விடயங்கள் முக்கியமானதா என்ற நிலை வருகின்றபோதே இலங்கையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இராணுவத்தரப்பிற்கே என அரசினால் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சாதாரண மக்களின் விடயங்களை அரசாங்கம் இரண்டாவது மூன்றாவது தரத்தில் வைத்தே கையாழுகின்றது.

இத்தகைய சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்களே வெளிக்கொண்டு வரவேண்டும். என்னைபொறுத்த வரையில் ஊடகங்கள் நேர்மையாக, நடுநிலைமையாக கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் இந்தியத்துணைத்தூதுவர் வெ.மகாலிங்கம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பாராளுமன்ற உறுப்பினரான சில்வெஸ்திரி அலென்ரின் ஆகியோருடன் சமயப் பெரியார்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply