சிரியா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஈரானும் அழைக்கப்பட்டுள்ளது: பான் கி மூன் தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தங்கள் நடைபெற்று வரும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனிவாவில் தொடங்கவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் சிரியாவின் அதிபர் பஷார் அல் அகமதுவும், அரசை எதிர்த்துவரும் போராட்டக் குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.இதற்கு முன்னால் வரும் புதன்கிழமை அன்று மான்ட்ரியக்சில் துவக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுவரும் அனைத்து நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி சிரியாவின் பிரச்சினை குறித்துப் பேசிய அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சக்திகள் அங்கு ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இந்தத் திட்டம் ஈரானால் மறுக்கப்பட்டது. அதனால் தற்போது நடைபெற உள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரானை அழைக்க மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்டின.

எனினும், சிரியாவின் பிரச்சினையை நீக்குவதில் ஈரானுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக ஐ.நா செயலர் பான்-கி-மூன் கருதினார். ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவேத் சரிப்புடன் ஐ,நா செயலர் பான்-கி-மூன் நேற்று ஆழ்ந்த பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார். அப்போது சிரியாவின் உள்நாட்டுப் போர் நிறுத்தத்தில் நேர்மறையான ஒரு ஆக்கபூர்வமான பங்கை வகிப்பதாக ஈரான் உறுதியளித்ததைத் தொடர்ந்து நேற்று அந்நாட்டிற்கும் அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையின் இயக்குநர் என்ற முறையில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கிரீஸ், லக்சம்பர்க், மெக்சிகோ, நெதர்லாண்ட்ஸ், தென் கொரியா மற்றும் வாடிகன் ஆகிய நாடுகளையும் இந்தப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் சிரியா அரசாங்கமும், எதிர்த்தரப்பு பிரதிநிதிகளும் துவங்க உள்ள கடின உழைப்பின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமையையும் முன்கூட்டியே வெளிப்படுத்தும் விதமாக தங்களது பேச்சுவார்த்தை அமையும் என்றும் பான்-கி-மூன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply