27 வருடங்களின் பின்னர் A-9 வீதியூடாக இராணுவத்தினர் பயணம்

வடக்கே யாழ் குடாநாட்டிற்கான ஏ9 வீதியூடான அரச படைகளின் தரைவழிப் பயணம் 24 வருடங்களின் பின்னர், இன்று ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வைபவ ரீதியாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பிரயாணத்தின்போது, 40 பேருந்துகளில் அனுராதபுரத்திலிருந்து இராணுவத்தினர் யாழ் குடாநாட்டிற்குப் பயணமாகியதாகவும், இதே போன்று 40 பேருந்துகளில் பலாலியில் இருந்து அரச படையினர் விடுமுறையில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

சரித்திர முக்கியத்துவம் மிக்க வைபவமாக இதனை வர்ணித்துள்ள இராணுவ தலைமையகம், இதனையொட்டி, அநுராதபுரம், ஓமந்தை, பலாலி மற்றும் ஆனையிறவு ஆகிய கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் விசேட வைபவங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் ‘’சாலை’’ பகுதியில் இராணுவத்தினர் மீது 15 படகுகளில் வந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளின் 2 படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாகப் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
 
நேற்று காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையில் இரு தரப்புக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம் இந்த மோதல்களின்போது விடுதலைப்புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

இதனிடையே, புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே அம்பலவன்பொக்கணை பகுதியில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த அதிசக்தி வாய்ந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றினை படையினர் கண்டுபிடித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. சக்தி வாய்ந்த உபகரணங்கள் மற்றம் பொருட்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு சிதறிக் கிடந்த நிலையில் இந்த நிலையத்தைப் படையினர் கண்டு பிடித்திருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply