ஈரான் அணுஉலையில் யுரேனியம் செரிவூட்டும் கருவிகள் துண்டிப்பு அணுகுண்டு தயாரிப்பது தடுத்து நிறுத்தம்

ஈரான் அணுஉலையில் அதிக சக்தி வாய்ந்த யுரேனியம் செரிவூட்டும் கருவிகள் நேற்று துண்டிக்கப்பட்டன. இதன் மூலம் இனி அணு குண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட முடியாது.அணுசக்தி உடன்பாடு

ஈரான் அணுசக்தி உலைகளில் ரகசியமாக அணுகுண்டு தயாரித்து வருவதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் அதை மறுத்த ஈரான் மின் உற்பத்தி போன்ற ஆக்கப்பூர்வ பணிக்கே பயன்படுத்துவதாக கூறியது. என்றாலும் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா உள்பட 6 நாடுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 24–ந்தேதி ஈரான் உடன்பாடு செய்தது. அதன்படி அணு உலைகளில் அதிகசக்தி கொண்ட யுரேனியம் செரிவூட்டுதலை கட்டுப்படுத்தி நிறுத்தப்பட வேண்டும், அதை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு நிபுணர்கள் பார்வையிடுவார்கள் என்று கூறப்பட்டது. அதை நிறைவேற்றினால் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிபுணர்கள் குழு விரைவு

இதனை தொடர்ந்து ஈரான் அணு உலைகளில் ஆய்வு செய்வதற்காக சர்வதேச அணுசக்தி அமைப்பின் நிபுணர்கள் 2 தினங்களுக்கு முன்பு டெக்ரான் சென்றனர். ஈரானில் நாதான்ஸ், போர்டோ ஆகிய இடங்களில் அணு உலைகள் அமைந்துள்ளன.

முதல் கட்டமாக அணுசக்தி நிபுணர்கள் குழுவினர் நேற்று நாதான்ஸ் பகுதியில் உள்ள அணு உலைக்கு சென்றார்கள்.

கருவிகள் துண்டிப்பு

இந்த அணுஉலையில் செயல்பாட்டு இயக்கத்தில் இருந்த யுரேனியம் செரிவூட்டும் சில கருவிகளின் இணைப்புகளை நிபுணர்கள் துண்டித்தார்கள். அணுஉலை முழுவதையும் பார்வையிட்ட, நிபுணர்கள் பிறகு போர்டோ அணுஉலைக்கு புறப்பட்டு சென்றார்கள்.

இந்த தகவலை ஈரான் தொலைக்காட்சி நேற்று பிற்பகல் அதிகாரபூர்வமாக தெரிவித்தது. ‘ஈரான் செய்து கொண்ட உடன்பாட்டின்படி அதிக சக்திவாய்ந்த யுரேனியம் செரிவூட்டு நீர்வழிப்பாதையை நிபுணர்கள் குழுவினர் துண்டிப்பு செய்தார்கள்’ என்று ஈரான் அணுசக்தி கழக தலைவர் அக்பர் சாலேஹி தெரிவித்ததாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

மேலும் அதில், ‘ஈரான் தனது 20 சதவீதம் யுரேனியம் செரிவூட்டலை நிறுத்தியது என்றும், இது அணுகுண்டு உற்பத்தி பொருட்கள் தயாரிப்பில் இருந்து விடுபடும் நடவடிக்கையாகும் என்றும் கூறியது.

அணுகுண்டு தயாரிக்க முடியாது

இதன் மூலம் 6 நாடுகளுடன் செய்து கொண்ட உடன்பாட்டை நேற்று ஈரான் நிறைவேற்றியது. அத்துடன் ஈரான் இனி அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.

உடன்பாட்டை நிறைவேற்றியதன் மூலம் ஈரான் பொருளாதார தடையில் இருந்து விடுபடுகிறது. ஏற்கனவே முடக்கம் செய்து வைக்கப்பட்ட பணம் மாத தவணைகளில் ஈரானுக்கு திரும்ப கிடைக்கும். வரும் 6 மாத காலத்தில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி (7 பில்லியன் டாலர்கள்) கிடைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply