இலங்கையில் ஈழ ராஜ்ஜியத்தை அமைப்பதற்கு புலிகள் சர்வதேசத்தை பயன்படுத்துகி்ன்றனர்: மைத்திரிபால
இலங்கையின் எல்லைக்கு அப்பால் உள்ள புலிகள் இலங்கையில் ஈழ ராஜ்ஜியத்தை அமைப்பதற்கு கனவு கண்டுவருகின்றனர். அதற்காக சர்வதேச சமூகத்தை இலங்கைக்கு பயன்படுத்த முயற்சித்துவருகி்றனர் என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஆனால் நிலைமையை புரிந்துகொண்டுள்ள அரசாங்கம் அதற்கேற்றவகையில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு எமது நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளித்துவருகின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைப் பேரவையிலும் பிரபல நாடுகள் கொண்டு வந்த பிரேரணைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறுவதற்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கும் எவ்வாறான தொடர்பும் இல்லை. மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
அந்தவகையில் தற்போது தேர்தலை நடத்தவில்லை என்றால் நாங்கள் அரசியலமைப்பு ரீதியான சிக்கலை எதிர்கொள்வோம். எனவே தேர்தலை நடத்துகின்றோம். அதேநேரத்தில் ஜெனிவா விவகாரமும் வந்துள்ளது.
ஜெனிவா விடயத்தை பொறுத்தவரை அரசாங்கம் யுத்தத்துக்குப் பின்னரான நாட்டின் முன்னேற்ற நிலைமை தொடர்பில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளை தெளிவுபடுத்திவருகின்றது. அண்மைக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விளக்கமளித்துவருகின்றார்.
அமைச்சர்களும் பல்வேறு நாடுகளுக்கு சென்று யுத்தத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து விளக்கமளித்துவருகின்றனர்.
இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஜெனிவா ஏன் பிரபாகரன் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்புவதில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். தமிழ்த் தலைவர்களையும் அப்பாவி மக்களையும் அரச தலைவர்களையும் புலிகள் அழித்தனர். எனவே அவர்களுக்கு எதிராக ஏன் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில்லை என்று கேட்கின்றோம். புலிகள் செய்த அட்டூழியங்களை இன்று பலர் மறந்துவிட்டனர்.
அந்தவகையில் இலங்கையின் எல்லைக்கு அப்பால் உள்ள புலிகள் இலங்கையில் ஈழ ராஜ்ஜியத்தை அமைப்பதற்கு கனவு கண்டுவருகின்றனர். அதற்காக சர்வதேச சமூகத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இதனை புரிந்துகொண்டுள்ள நாங்கள் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.
வடக்கில் இன்று பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும். யுத்தத்தை இராணுவத்தினரும் எமது தலைவர்களும் சரியாகவே செய்தனர்.
இதேவேளை இலங்கை தொடர்பில் பிரேரணை வந்தால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் சுயாதீனமாக செயற்படும் என்று நம்புகின்றோம். மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் சுயாதீனமாகவே செயற்படும். வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைப் பேரவையிலும் பிரபல நாடுகள் கொண்டு வந்த பிரேரணைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply