ஏழு வீரர்கள் காயம்; எட்டு பாக். பொலிஸார் பலி நால்வர் கைது: போட்டி ஆரம்பமாக முன் சம்பவம்
இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு வீரர்களும் உதவி பயிற்றுவிப்பாளரும் காயமடைந்துள்ளனர்.
இனந்தெரியாத துப்பாக்கி தாரிகள் நடத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 8 பாகிஸ்தான் பொலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி வரும் இலங்கை அணியினர், மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக, ஹோட்டலிலிருந்து லாகூர் – கடாஃபி மைதானத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை 9 மணியளவில் இல ங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி லாகூர் லிபர்ட்டி சந்தைக் கட்டடத் தொகுதியைக் கடந்துசென்ற மறுகணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஸ் வண்டி மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள், கைக்குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
பஸ் வண்டிக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு பொலிஸ் கமாண்டோ படையினரும், இரண்டு போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் அடங்களாக எட்டுப்பேர் கொல்லப்பட்டனர்.
காயத்திற்குள்ளான இலங்கை வீரர்களான திலான் சமரவீர, தரங்க பரணவிதான, மஹேல ஜயவர்தன (தலைவர்), குமார சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலின துஷார, சமிந்த வாஸ் உதவி பயிற்றுவிப்பாளர் போல் சபோ ஆகியோர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஏனைய வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திலான் சமரவீரவுக்கு மார்புப் பகுதியிலும், தரங்க பரணவிதானவுக்கு தோள்பட்டையிலும் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருந்ததாகவும், சத்திர சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் லாகூர் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்தது.
இரண்டு வீரர்களைத் தவிர ஏனையோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் இனந்தெரியாத 12 துப்பாக்கிதாரிகள் ஈடுபட்டிருக்கலாமென பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் திட்டமிட்ட முறையில் பாரிய தாக்குதலை நடத்துவதற்கு இவர்கள் எத்தனித்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிதாரிகள் நடமாடிய காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து ரொக்கட் லோஞ்சர் செலுத்தி ஏ-கே 47 ரகத் துப்பாக்கிகள், கைக்குண்டுகள் போன்றவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் வெள்ளை நிற காரில் வந்தே தாக்குதல் நடத்தியிருக்கலாமெனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டியில் வந்திருக்கக் கூடுமென்றும் பாகிஸ்தான் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள லிபர்ட்டி சந்தைக் கட்டடத்தைச் சுற்றி வளைத்து பொலிஸார் தேடுதல் நடத்தியதாகவும், இதன்போது நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் ஏனைய துப்பாக்கிதாரிகளை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்வதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியினரை உடனடியாக நாட்டுக்குத் திருப்பியழைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தது.
இலங்கை வீரர்கள் பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் நேற்றுப் பிற்பகல் டுபாய்க்குக் கொண்டுசெல்லப்பட்டதாகப் பிந்திய செய்திகள் தெரிவித்தன. இலங்கையிலிருந்து விசேட விமானத்தை அனுப்பி இலங்கை அணியினரை வரவழைத்துக்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மறுத்திருந்த நிலையில் இலங்கை அணி அங்கு சென்று போட்டிகளில் பங்குபற்ற இணங்கியிருந்தது.
இதேவேளை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2009ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில்லையென சர்வதேச கிரிக்கெட் சபை கடந்த மாதம் தீர்மானித்திருந்தது.
பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து 2011 இல் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply