பாகிஸ்தானில் நபிகள் நாயகத்தை அவமதித்து செய்தி அனுப்பிய கிறிஸ்தவ தம்பதியருக்கு தூக்குத்தண்டனை

பாகிஸ்தானின் கோஜ்ரா நகரத்தில் வசித்து வந்த ஏழைத் தம்பதியர் சாகத் இம்மானுவல்-ஷகுப்டா கவுசர். நாற்பது வயதுகளில் இருக்கும் இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த நகரம் பெயர் பெற்றதாகும். கடந்த 2009 ஆம் ஆண்டில் புனித நூலான குரானை அவமதித்ததாகக் கூறி இங்கு 77 வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டதில் குறைந்தது ஏழு பேர் பலியாகியானர். அதேபோல் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முஸ்லிம் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறி சவான் மாசி என்ற கிறிஸ்துவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில் 97 சதவிகிதத்தினர் முஸ்லிம்களாக இருப்பதினால் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் கூட இங்கு பொதுமக்களிடத்தில் வன்முறைக் கலவரங்களைத் தூண்டிவிடுகின்றது என்று தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று கோஜ்ராவில் உள்ள ஒரு மசூதியின் பிரார்த்தனைத் தலைவரான மௌல்வி முகமது ஹுசைன், இந்தத் தம்பதியினரின் செல்போனிலிருந்து நபிகள் நாயகத்தை அவமதிப்பதான ஒரு தகவல் தனக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், மனைவியின் போனிலிருந்து இம்மனுவல்தான் தனக்கு இந்தத் தகவலை அனுப்பியுள்ளதாகவும் காவல்துறையில் ஒரு புகார் அளித்தார்.

இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இவர்களுடைய செல்போன் முன்னரே தொலைந்துபோய்விட்டது என்றும் அதனால் இந்தத் தகவலை இவர்கள் அனுப்பியிருக்க முடியாது என்றும் அவர்களது வக்கீல் நதீம் ஹசன் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி தனிப்பட்ட காரணங்களுக்காகத் தங்களின் எதிராளிகள் யாரேனும் இதுபோன்ற தவறுகளைச் செய்திருக்கலாம் என்றும் அந்தத் தம்பதியர் முறையிட்டனர்.

இருப்பினும் இஸ்லாம் மதத்தையோ, நபிகள் நாயகத்தையோ நிந்திப்பவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பிரயோகிக்கும் பாகிஸ்தான் இந்தத் தம்பதியினருக்கும் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கியுள்ளது. டோபா டேக் சிங் என்ற நகர சிறையினில் வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தம்பதியினருக்கு கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றத்தின் நீதிபதி மியான் அமீர் ஹபிப் நேற்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இருவருமே குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்று அவர்களின் வழக்கறிஞர் ஹசன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply