பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி இன்று இலங்கை வருகை யாழ்ப்பாணத்துக்கும் விஜயம்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத் இன்று இலங்கை வருகிறார். இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜெனரல் ரஷாட் மஹ்மூத் பாகிஸ்தான் இராணுவ ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு பின்னர் உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இலங்கை வருவது இதுவே முதற் தடவையாகும்.
இன்று இலங்கை வரும் அவருக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படவுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 20 வெளிநாட்டு மாணவர்களும் கல்வி கற்கும் இலங்கையிலுள்ள பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் அதிகாரிகள் கல்லூரிக்கு செல்லும் அவர் ‘பாகிஸ்தானின் பாதுகாப்பு கண்ணோட்டம்’ என்ற தொனிப் பொருளில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் உட்பட தியத்தலாவ, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு இடையில் கடந்த காலங்களில் மிகவும் நெருக்கமான உறவுகள் காணப்படுவதுடன் இவரது விஜயம் இந்த உறவுகளில் மேலும் வலுப்படும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply