பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறுகிறார் மன்மோகன்சிங்
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பிரதமர் மன்மோகன்சிங் புதிய பங்களாவில் குடியேறுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், தற்போது பிரதமருக்குரிய அலுவல் பூர்வ இல்லமான ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 7-ம் எண் பங்களாவில் வசித்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு ஓய்வு பெற விரும்பும் அவர், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, தான் வசிக்கும் இல்லத்தில் இருந்து வெளியேறி வேறொரு பங்களாவில் குடியேற முடிவு செய்தார். இதனையடுத்து, அவருக்கு மோதிலால் நேரு சாலையில் உள்ள 3-ம் எண் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. 3½ ஏக்கர் பரப்பளவில் 4 படுக்கை அறைகளை கொண்ட இந்த பங்களா 1920-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். முன்னாள் பிரதமர் தனது பங்களாவிற்கு வருபவர்களை சந்தித்து பேசுவதற்காக ஒரு பெரிய அறையும் இங்கு உள்ளது. இந்த வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றும் உள்ளது.
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் இந்த வீட்டில் குடியிருந்தார். டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பின்பு இந்த வீட்டை அவர் காலி செய்து விட்டார். இங்குதான் தற்போது மன்மோகன்சிங் குடியேற இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன்சிங்கும், அவரது மனைவி குர்சரண் கவுரும் இந்த பங்களாவிற்கு வந்து பார்வையிட்டு சென்றனர். சிறப்பு பாதுகாப்பு படையினரும் அவ்வப்போது இங்கு வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு சென்று வருகிறார்கள்.
இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணி ரூ.35 லட்சம் செலவில் நடந்து வருகிறது. சுவர்கள் அனைத்தும் பெயிண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதே போல் மேற்கூரையும் அழகுபடுத்தப்படுகிறது.
மேலும் நாற்காலி, மேஜை, சோபா போன்றவை வைப்பதற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இது தவிர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும், தரைதளத்தில் பலகைகளை அகற்றிவிட்டு மொசைக் பாலீஷ் போடும் பணியும் நடந்து வருகிறது.
இந்த பணிகளை வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்கும்படி மத்திய பொது பணித்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் டெல்லி பெரு நகர வளர்ச்சி குழுமம் மன்மோகன்சிங் குடியேற இருக்கும் பங்களாவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையின் பழுதுகளையும் சீரமைத்து வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்து விட்டால் அதன்பின்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மன்மோகன்சிங் இந்த பங்களாவில் குடியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2004-ம் ஆண்டு பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் குடியேறுவதற்கு முன்பாக மன்மோகன்சிங் இதேபோல் ஒரு மாதம் வரை காத்திருந்தார்.
அப்போது வாஜ்பாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்ட நிலையிலும் வாஜ்பாய்க்கு புதிய பங்களா உடனடியாக ஒதுக்கப்படாததால் இதுபோல் மன்மோகன்சிங் காத்திருக்க நேர்ந்தது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply