ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்வாரா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

மின் தட்டுப்பாட்டிற்கான சதியை கவனிக்க தவறிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்வாரா? என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.

பதில்:- பிரகாசமாக உள்ளது

கேள்வி:- எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள்?

பதில்:- 40-க்கு 40-ம் வெற்றி பெறுவோம்.

கேள்வி:- அனைத்து கட்சியினரும் இதைதான் சொல்கிறார்கள்

பதில்:- அவர்கள் அவரவர் விருப்பத்தை சொல்கிறார்கள். நாங்கள் மக்கள் விருப்பத்தை சொல்கிறோம்.

கேள்வி:- மு.க.அழகிரி தி.மு.க. 4-வது இடத்திற்கு தள்ளப்படும் என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்:- அதுபோன்ற செய்தியை பார்ப்பதும் இல்லை. படிப்பதும் இல்லை.

கேள்வி:- பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சிகளும் எதையுமே செய்யவில்லை என கூறி உள்ளாரே?

பதில்:- அவரை முதலில் குஜராத் மாநிலத்தில் எல்லாவற்றையும் செய்து விட்டு வர சொல்லுங்கள்.

கேள்வி:- தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவர் முதல்-அமைச்சர் மட்டும் அல்ல. காவல்துறையும், புலனாய்வுதுறையும் அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே அதனை கவனிக்க வேண்டியதும், மேற்பார்வை செய்ய வேண்டியதும் அவரது வேலை. அதனை மீறி அது நடந்து உள்ளது என்றால், அப்பொறுப்பில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார். அதனால் மரபுபடி அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான காந்திசெல்வன், நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் முத்துசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply