தென் கொரியாவில் படகு விபத்து: 292 பேர் மாயம்; 3 பேர் உடல் மீட்பு
தென் கொரியாவில் 459 பேருடன் கடலில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்ததில் அதிலிருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 292 பேரை காணவில்லை.விடுமுறையையொட்டி, அருகிலுள்ள தீவுக்கு சுற்றுலா சென்ற பள்ளிக் குழந்தைகளே பெரும்பான்மையாகச் சென்ற அந்தப் படகில், இன்னும் பலர் இருப்பதாக கூறப்படுவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்தப் படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்குவதையும், அதிலிருந்து குதிக்கும் பயணிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் காப்பாற்றப்படுவதையும் தென் கொரிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியது.
மீட்புக் குழுவினர் அந்தப் படகில் ஏறி, பயணிகளை மீட்டனர். எனினும் சில மணி நேரத்துக்குள் படகு முழுமையாகக் கவிழ்ந்து, கடலுக்குள் மூழ்கியது.
மீட்புப் பணியில் 160 கடலோரக் காவல் படையினரும், கப்பல்படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பயணம் செய்தவர்கள்: விபத்துக்குள்ளான கப்பலில், 325 பள்ளி மாணவர்களும், 15 ஆசிரியர்களும், மாணவர்களல்லாத 15 பயணிகளும், 30 படகு சிப்பந்திகளும் பயணம் செய்ததாக தென் கொரிய பொது நிர்வாக மற்றும் சமூக பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் லீ க்யோங்-ஓக் தெரிவித்தார்.
தென் கொரியாவின் வட பகுதியிலுள்ள இன்செயோன் நகரிலிருந்து, சுற்றுலா தீவான ஜெஜுவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அந்த கப்பல் புறப்பட்டதாகவும், தீவை அடைவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை எனவும், தற்போது மீட்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறுகையில், “”உயிரிழந்தவர்களில் பெண் சிப்பந்தி ஒருவரும், மாணவன் என நம்பப்படும் சிறுவன் ஒருவனும் அடங்குவர்.
மீட்கப்பட்ட 164 பேரில் 55 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அந்நாட்டில் 1993-ஆம் நிகழ்ந்த படகு விபத்தில், 292 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply