உக்ரைனில் உள்நாட்டுப் போர் மூளும்: ரஷியா எச்சரிக்கை
ரஷிய ஆதரவாளர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பியுள்ள உக்ரைனின் செயல், அந்நாட்டை உள்நாட்டுப் போரின் விளிம்புக்குத் தள்ளியிருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லுடன் அவர் தொலைபேசியில் உரையாடினார். அதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் அதிரடி நடவடிக்கையால் அந்நாடு உள்நாட்டுப் போரின் விளம்புக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஜெர்மன் அதிபர் மெர்க்கெல்லிடம் அதிபர் புதின் தெரிவித்தார்.
ரஷியா, உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதரக உயரதிகாரிகள் மேற்கொள்ளும் நான்கு தரப்புப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை, தங்களது உரையாடலின்போது இரு தலைவர்களும் வலியுறுத்தினர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷிய ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் இஸியும் நகரை நோக்கி, 20 டாங்க்குகளையும், ராணுவ வீரர்களுடன் கவச வாகனங்களையும் உக்ரைன் செவ்வாய்க்கிழமை அனுப்பியது.
உக்ரைனின் அந்த நடவடிக்கைக்கு ரஷியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஆதரவு: இதற்கிடையே, உக்ரைனின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், “”உக்ரைனில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியால், இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டிய நிலைக்கு உக்ரைன் அரசு தள்ளப்பட்டுள்ளது.
நிலைமை சீராக வேண்டுமானால், அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரஷியக் கொடியுடன் கவச வாகனங்கள்!
ஸ்லாவ்யான்ஸ்க் (உக்ரைன்): உக்ரைனில் உள்நாட்டுப் போர் மூளும் என்ற ரஷிய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ரஷிய கொடியுடன் கூடிய ராணுவ கவச வாகனங்கள் உக்ரைன் பகுதியில் தென்படுவதாக வெளியான செய்தியால் பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைனின் ஸ்லாவ்யான்ஸ்க் நகரில், ரஷிய கொடியுடன் 6-க்கும் மேற்பட்ட கவச வாகனங்களைக் கண்டதாக ஏ.எஃப்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், உக்ரைன் ராணுவத்தினரில் ஒரு பகுதியினரே, ரஷியாவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதால்தான் கவச வாகனங்களில் ரஷிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதாக ரஷியா கூறியுள்ளது. உக்ரைன் அதிகாரிகளும், தங்களது ராணுவ வாகனங்கள் எதையும் ரஷிய ஆதரவுப் படையினர் கைப்பற்றியதாக தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply