அரசின் கதவுகள் திறந்தேயுள்ளன கூட்டமைப்பு எப்போதும் பேச வரலாம் : அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரமும் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவே உகந்த இடம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட த.தே.கூ. பிரதிநிதிகள் தென்ஆபிரிக்கா வின் சமரசத்துடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இது குறித்து வினவியதற்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,
அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிவிப்பை வரவேற்கிறது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்துள்ளது. அரசியலமைப்பு திருத்தம் அடங்கலான பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்படுகிறது. இதில் அங்கம் வகிக்குமாறு நாம் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தெரிவுக் குழுவுக்கு வந்து தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தெரிவுக் குழுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு உகந்த இடம். இங்கு அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச முடியும்.
அரசாங்கம் த.தே.கூ. வுடன் பேசுவதற்கு தயாராக உள்ள போதும் த.தே.கூ.வே பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தாமதப்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply