உக்ரைனில் ராணுவம் அதிரடித் தாக்குதல்: 3 ரஷிய ஆதரவாளர்கள் சுட்டுக் கொலை
உக்ரைனில் ரஷிய ஆதரவாளர்கள் மீது ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர்; 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால், ரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் அந்த பிராந்தியத்தில் எந்த நேரத்திலும் உள்நாட்டுப் போர் மூளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருவதாகவும், அங்கு நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய ஆதரவாளர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, உக்ரைன் உள்துறை அமைச்சர் ஆர்சென் ஆவாகோவ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருங்கடல் பகுதியில் உள்ள மரியுபோல் துறைமுக தேசிய கடலோர படைத்தளம் அருகே மொலோடோவ் கேளிக்கை விடுதியில் ஆயுதங்களுடன் 300 பேர் புதன்கிழமை இரவு கூடியிருந்தனர். அப்போது, ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது’ என்றார்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றிய ஸ்லோவைன்ஸ்க் மற்றும் பிற நகரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள மரியுபோல் நகர் உள்பட 10 நகரங்களில் அரசு கட்டடங்கள், காவல் நிலையங்கள் மற்றும் கவச வாகனங்கள், ஆயுதங்களை தீவிரவாதிகள் கடந்த வாரம் கைப்பற்றிக் கொண்டனர். அங்கிருந்து வெளியேறும்படி உக்ரைன் அரசு விடுத்த கெடுவை அவர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து அரசு அப்பகுதிக்கு ராணுவத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பியது.
தூதர்கள் ஆலோசனை: இதனிடையே, உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளின் தூதர்கள் தலைநகர் கீவில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, உக்ரைனில் புதிய அரசை ஏற்படுத்துவதற்கு அச்சுறுத்தலாக உள்ள பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஒபாமா எச்சரிக்கை: இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உக்ரைனின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும்.
உக்ரைன் போன்ற நாடுகள் தங்களது அண்டை நாடுகளுடன் இணக்கமான நட்புறவினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அந்த நாடு யாருடன் நட்புறவை விரும்புகிறது என்பது அந்நாட்டின் முடிவினைப் பொறுத்தது என்று ஒபாமா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply