படகில் இருந்த  மாணவர்களின் கடைசி நேர குறுஞ்செய்திகள்

தென் கொரியாவில் புதன்கிழமை விபத்துக்குள்ளான படகில் இருந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிய உருக்கமான கடைசி நேர குறுஞ்செய்தியால் தென் கொரியா சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகமான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக காணாமல் போன 287 பேரைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தென் கொரியாவின் அன்ஸான் நகரில் உள்ள டான்வோன் பள்ளி மாணவர்கள் 325 பேர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 475 பேர் ஜெஜு தீவிற்கு சிவோல் என்ற படகில் புதன்கிழமை சுற்றுலா சென்றனர். இந்தப் படகு பயங்பூங் தீவு அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தப் படகு மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் படகில் இருந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மிகவும் உருக்கமாக உள்ளன.

அதில் ஷின் யாங்-ஜின் என்ற மாணவன் தனது தாய்க்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், “இனி மேல் நான் உன்னிடம் இதைச் சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை அம்மா, நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

படகு விபத்துக்குள்ளானதை அறியாத அந்த மாணவனின் தாய், மகனுக்குத் திருப்பி அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், “நானும் உன்னை மிகவும் நேசிக்கிறேன் மகனே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு மாணவியான ஷின் அவரது தந்தைக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், “அப்பா கவலைப்படாதீர்கள் நான் உயிர் காப்பு கவசம் அணிந்துள்ளேன். என்னுடன் நிறைய மாணவிகள் உள்ளனர். நாங்கள் படகின் மையப் பகுதியில் உள்ள பெரிய அறையில் இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன மாணவர்கள் குறித்த தகவல்களைப் பெற அன்ஸான் நகரில் உள்ள பள்ளியிலும், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள ஜிண்டோ தீவிலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த 5 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் படகின் பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 9 பேரின் உடல்களை அந்நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply