பினாமி அரசை நடத்தியவர் சோனியா: நரேந்திர மோடி

மத்திய அரசை பின்னால் இருந்து இயக்கியதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் தேர்தலில் தக்க விலை கொடுக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலம் ககோய்ஜனில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் மத்தியில் வலுவான மற்றும் ஸ்திரமான அரசை அமைக்க முடியும். தேர்தலின்போது இளைஞர்கள் மிகவும் கவனமாக தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். தேர்தலின்போது தவறான முடிவுகளை இளைஞர்கள் எடுத்தால், அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கடந்த தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டது. அக்கட்சியை இத்தேர்தலில் இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தனது புத்தகத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கைவிட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அதிகாரம் மிக்கவர்களாக திகழ்ந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உண்மையான பிரதமர்களாக யார் செயல்பட்டார்கள் என்பது தெளிவாகிறது. தங்களது நடவடிக்கைகளுக்காக தாயும், மகனும் (சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்) தக்க விலை கொடுக்க வேண்டும்.

குஜராத் மாநிலம் குறித்து பொய்யான தகவல்களை சோனியாவும், ராகுலும் பரப்பி வருகின்றனர். குஜராத்தில் உள்ள சிறு ஆலைகள் மூடப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. தேர்தலின்போது மட்டுமே அவர்கள், மக்களைத் தேடி வருவார்கள். மத்தியில் அரசு அமைந்ததும், திரைச்சீலையின் பின்னால் அவர்கள் மறைந்து கொள்வார்கள்.

வங்கதேசத்தில் இருந்து வருபவர்களுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேசமயம், வங்கதேசத்தில் இருந்து வரும் ஹிந்து மதத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தொடர்ந்து சந்தேகத்துடன் அவர்கள் நடத்தப்படுவதுடன், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அநீதியாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி இதுபோன்று செயல்படுகிறது என்றார் மோடி.

பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: மங்கள்டோய் மற்றும் நௌகாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடி பேசுகையில், “தில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உயிரிழந்த துணை மருத்துவ மாணவியின் நினைவாக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடியில் ஒரு ரூபாயை கூட பெண்களின் பாதுகாப்புக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்தவில்லை. இதன்மூலம் பெண்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏமாற்றிவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் நிர்பயா நிதிக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்குவதாக மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply