புலிகளால் செக்கோசெலவாக்கியாவில் கொள்வனவு செய்யப்பட்டு கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலின் 143 விமானங்கள் தென்னாபிரிக்காவுக்கு பயிற்சிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டனவா?
கடந்த மாதம் கொழும்பு மற்றும் கட்டுநாயக்கா வான்பரப்பிற்குள் ஊடுருவிப் பறந்து தாக்குதல்களை மேற்கொள்ளமுயன்ற புலிகள் இயக்கத்தின் இரண்டு சிறியரக விமானங்களையும் அரசபடையினர் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து கட்டுநாயக்காவிலும் கொழும்பிலும் வீழ்ந்துள்ள புலிகளின் விமானங்களின் பாகங்களையும் என்ஜின் பகுதிகளையும் சோதனையிட்ட விமானப்படையினர், அந்த விமானங்கள் சிலின் 143 வகையைச்சேர்ந்த சிறியரக விமானங்களே என்பதை உறுதிசெய்திருந்தனர். அத்துடன் அந்த இரண்டு சிலின் விமானங்களில் ஒன்றின் என்ஜினையும் விமானப்படையினர் கைப்பற்றியிருந்தனர். அதைப்பரிசோதித்ததில் அந்த என்ஜின் இலக்கமும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சிலின் வகை விமானங்கள் செக்கோசெலவாக்கியாவைச் சேர்ந்த மொறோவன்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுபவை ஆகும். ஏற்கனவே புலிகள் இயக்கத்தினர் சிலின் விமானத்தாக்குதல்களை நடத்தியிருந்ததால் அந்தச் சம்பவங்களைத்தொடர்ந்து செக்கோசெலவாக்கிய இரகசியப் பொலிஸ்பிரிவினர் முன்னரே மொறோவன்ஸ் சிலின் உற்பத்தி நிறுவனம்பற்றி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். கடந்தமாதம் மறுபடியும் புலிகள் இயக்கத்தினர் சிலின் விமானத்தாக்குதல்களை நடத்தியதைத்தொடர்ந்து செக்கோசெலவாக்கிய இரகசியப்பொலிஸ் தரப்பும் மொறோவன்ஸ் உற்பத்தி நிறுவனம்மீது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருந்தது. இதன் பயனாக அண்மையில் செக்கோசெலவாக்கிய இரகசிய பொலிஸ் பிரிவிலிருந்தும் மொறோவன் நிறுவனத்திடமிருந்தும் வெளியாகியுள்ள தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தினரோ அல்லது இயக்க ஆதரவாளர்களோ இவ்வாறு 3 சிலின் 143 விமானங்களை செக்கோசெலவாக்கியாவில் மொறோவன்ஸ் நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்ததாகவும் இந்த விமானங்களை செலுத்தும் விமானப் பயிற்சிகளை புலிகள் இயக்கத்தினர் தென்னாபிரிக்காவிலுள்ள விமானப்பயிற்சி நிறுவனத்திலேயே பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி செக்கோசெலவாக்கிய இரகசிய பொலிஸ் தெரிவித்துள்ள தகவல்களில் மேற்படி 3 சிலின் 143 விமானங்களையும் கனடாவிலுள்ள அரச அல்லது தனியார்துறை தரப்பைச் சேர்ந்த சிலரே கொள்வனவு செய்துள்ளதாகவும் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மூன்று சிலின் 143 வகை விமானங்களும் முதலில் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் விமானப்படையினரால் 2 புலிகளின் சிலின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டுநாயக்காவில் வீழ்த்துகிடந்த என்ஜினின் இலக்கத்தைக் கண்டுபிடித்த விமானப்படையினர், அது பற்றிய விபரங்களை செக்கோசெலவாக்கிய இரகசியப் பொலிஸ் பிரிவினருக்கும் அவ்வாறே மொறோவன்ஸ் சிலின் உற்பத்தி நிறுவனத்துக்கும் விசாரணைகளுக்காக அறிவித்திருந்தனர். அந்த விமானம் புலிகள் இயக்கத்தினருக்காக மொறோவன்ஸ் நிறுவனத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டது என்பதால் குறித்த என்ஜின் இலக்கத்தை வைத்து விசாரணை நடத்திய மொறோவன்ஸ் நிறுவனம், அந்த என்ஜினுக்குரிய சிலின் 143 ரகவிமானம் உட்பட மூன்று சிலின் விமானங்களையும் செலுத்தும் விமானப்பயிற்சிகளை தென்னாபிரிக்காவிலுள்ள ஒரு பிரபலமான விமானப்பயிற்சி நிறுவனமே புலிகளுக்கு வழங்கியது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் இது சம்பந்தப்பட்ட விசாரணைகளில் ஸ்ரீலங்கா விமானப் படையினருக்கு சிறிலங்காவில் உதவிசெய்வதற்காக விசேட விமானப்படைக்குழுவொன்றை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிவைப்பதற்கும் செக்கோசெலவாக்கியா அரசு விருப்பம் தெரிவித்து அனுமதி கோரியுள்ளது எனப் பாதுகாப்பு உயர்மட்டத் தகவல் வட்டாரங்கள் கடந்த 23 ஆம் திகதி தெரிவித்தன.
மேலும் செக்கோசெலவாக்கியா இரகசிய பொலிஸ் பிரிவுதரப்பிலும் மொறோவன்ஸ் சிலின் உற்பத்தி நிறுவனம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் தென்னாபிரிக்காவில் ஐந்து பிரபல விமானப் பயிற்சி நிறுவனங்கள் இயங்கிவருவதாகவும் இவை கேப்ரவுண் டோர்பன் , ஜோஹனஸ்பேர்க் ஆகிய பிரதான நகரங்களில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இவற்றில் எந்த நகரிலுள்ள விமானப்பயிற்சி நிலையத்துக்கு புலிகள் இயக்கத்தினர் குறித்த சிலின் விமானிகளப்பயிற்சிக்காக எடுத்துச்சென்றனர் என்றோ செக்கோசெலவாக்கியாவில் கொள்வனவு செய்யப்பட்டு கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கருதப்படும் இந்த சிலின் 143 விமானங்கள் பின்னர் எவ்வாறு கனடாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு பயிற்சிகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டது என்ற தகவல்களை செக்கோசெலவாக்கிய இரகசிய பொலிஸ் வெளியிடவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply