1984 ஆம் ஆண்டுக்கு பிறகு மின்சாரத்தைக் கண்ட தமிழ்க் கிராமம்
போரின் சிதைவுகள் தமிழ் மக்களை, அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த கிராமங்களை உலகின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொடர்ச்சியாக இருட்டில் தள்ளியுள்ளது என்பதே நிதர்சனம். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள அழகாபுரி கிராமமும் போரின் வடுக்களோடு கடந்த பல காலமாக ஒளியின்றி கிடந்தது. கடந்த 1984 ஆம் ஆண்டிலிருந்து மின்சாரத்தைக் காணாமல் ஏங்கித் தவித்த கிராம மக்களுக்கு 20.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறீ ரெலோ இயக்கத்தின் செயலாளர்நாயகமான உதயராசா அவர்கள் மின்சாரத்தை வழங்கி அக்கிராம மக்களின் வாழ்வில் ஒளியூட்டினார்.
குறித்த கிராமத்துக்கு நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக மின்சாரம் வழங்க வந்த உதயராசாவிற்கு அழகாபுரி கிராம மக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். ஏராளமான கிராம மக்களும், மின்சாரசபை ஊழியர்கள், ஆன்மீகத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற 74 வயது முதியவர் கருத்து தெரிவிக்கையில்,
இதுவரைக்கும் எத்தனையோ எம்.பிமார் இங்க வந்திட்டு போனவையள். ஆனால், உதயராசா தம்பி மட்டும் தான் எங்களுக்கு சொல்லாமலேயே எங்கட கிராமத்துக்கு கரண்டைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு நாங்கள் எப்போதும் நன்றிக்ககடன் பட்டிருப்போம். இவ்வளவு நாளும் குப்பி விளக்கில படிச்ச எங்கட பேரப் பிள்ளைகள் இனியாவது மின் விளக்கில படிச்சு முன்னேறட்டும். என்றார்.
வாக்குக் கேட்டு மட்டும் தான் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கிராமத்துக்குள் கால் வைத்ததாகவும், தேர்தல் முடிந்த பிற்பாடு இந்தப் பக்கமே அவர்கள் வருவதில்லை எனவும் அக்கிராம மக்கள் உதயராசாவிடம் முறையிட்டனர்.
மின்சாரம் வந்த சந்தோசத்தில் கிராம மக்கள் பலரும் உதயராசாவைக் கட்டிப் பிடித்து தங்களது நன்றியறிதலை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டதோடு அடுத்த தேர்தலில் எங்கட கிராமத்துக்கு நீங்கள் வரத் தேவையில்லை. எங்கட வாக்குகள் எல்லாம் உங்களுக்கு தான் என உறுதி கூறினர்.
போரின் கொடூரத்தால், அக்கிராமத்தில் பலருக்கு வீடுகள் இல்லை. அந்த மக்கள் தங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தையும் பெற்றுத் தருமாறு உதயராசாவிடம் கோரிக்கை விடுத்தனர். அவரும் விரைவில் அதனையும் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply