உக்ரைனுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ரஷியா: போர் பதற்றம் அதிகரிப்பு

உக்ரைன் பிரச்னைக்கு பூர்வாங்கமாக தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ள புதிய பேச்சுவார்த்தையை ரஷியா நிராகரித்ததால் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. உக்ரைனில் போர்ப் பதற்றத்தை தணிக்கும் வகையில் அந்நாட்டுடன் ரஷியா பேச்சுவார்த்தையை மேற்கொள்ளாவிட்டால் உக்ரைனில் உள்நாட்டுப் போர் மூளும் என்று பிரான்ஸ் அதிபர் ஃபிராங்காயிஸ் ஹோலாந்த், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மீயர் ஆகியோர் எச்சரித்துள்ளனர். இதனிடையே, உக்ரைன் கிழக்குப் பகுதியில் ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் அரசுக் கட்டடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்க ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 34 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக உக்ரைன் அறிவித்துள்ளது. வியன்னாவில் 30 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரீ தேஷிட்சியா, “”ரஷியாவின் ஆதரவுடன் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கோப மூட்டும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால், அந்தக் கூட்டத்தில் பேசிய ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷெர்ஜி லாவ்ரோவ், “”உக்ரைனில் தற்போது வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் அங்கு தேர்தல் நடத்துவது முறையல்ல” என்றார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக புதிய பேச்சுவார்த்தை நடத்தும்படி ஜெர்மனி தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியதையும் நிராகரித்த லாவ்ரோவ், “”உக்ரைன் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தாதவரை எந்தவித பயனும் ஏற்படாது” என்றார்.

இதனிடையே உக்ரைனில் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சுமுகமாக நடத்தி அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்கா குற்றச்சாட்டு: இதனிடையே, உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களை மறைமுக பொதுவாக்கெடுப்பு மூலம் தனது நாட்டுடன் இணைக்க ரஷியா முயற்சித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் கிரீமியா தீபகற்பத்தை பொதுவாக்கெடுப்பு மூலம் தன்னுடன் இணைத்துக் கொண்டதைப் போல ரஷியா மீண்டும் உக்ரைனின் பல பகுதிகளை இணைக்க முயற்சித்து வருகிறது.

இத்தகைய நடவடிக்கையை எந்த ஒரு ஜனநாயக நாடும் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைனை பிரிக்க நினைக்கும் சட்டத்துக்குப் புறம்பான ரஷிய நடவடிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம்” என்றார்.

இந்தியா கவலை

உக்ரைனில் நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் கவலையளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “”உக்ரைனில் ஒடேஸ்ஸா பகுதியில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அங்கு நிகழ்ந்து வரும் வன்முறை கவலையளிப்பதாக உள்ளது. வன்முறைகளை கைவிட்டு சமீபத்திய ஒப்பந்தத்தின்படி அரசியல் மற்றும் ராஜீய ரீதியாக இந்தப் பிரச்னைக்கு சட்டப்பூர்வமான தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply