ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: நாளையும் விசாரணை தொடரும்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மே 9) ஒத்திவைத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் ஊழல் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி நல்லம்ம நாயுடு அளித்த சாட்சியத்தில், “தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் எனது தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகள், கட்டடங்கள், வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக 258 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது’ என்று அவர் குறிப்பிட்டிருந்ததை அரசுத் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வரும் 15-ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வாதத்தை எடுத்துரைக்கவும், ஜெயலலிதா தரப்பில் வருகிற 19-ஆம் தேதி வாதிடவும் உத்தரவிட்டார்.

முன்னதாக, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி தரப்பில் வழக்குரைஞர் குமார் தாக்கல் செய்த மனு விவரம்:

மெடோ அக்ரோபார்ம், ரிவர்வே நிறுவனங்கள் தங்கள் சொத்துகளை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைக்காக, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்த முடியாது. இரண்டுமே ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும். எனினும், தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விடுப்பது தொடர்பான தீர்ப்புக்குப் பிறகே, பிரதான வழக்கின் தீர்ப்பு கூறப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply