2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த 26 பேர் கொண்ட குழு இன்று கொழும்பு பயணம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர். பன்னாட்டு கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து விடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம், தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான துரித நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். இதன் விளைவாக, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்படுகின்றனர்.

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் கடந்த ஜனவரி 27-ந் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 13-ந்தேதி கொழும்புவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் பேச்சுவார்தை நடைபெறுவதும் தடைப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

சுமார் 3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் அகில இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.இளங்கோ தலைமையில் 13 மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கொழும்புவில் நடக்கும் கூட்டத்தில் என்ன கருத்தை கூற வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறப்பட்டது.

பின்னர் எம்.இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தலைநகர் கொழும்புவில் 12-ந்தேதி (திங்கட்கிழமை) 2-ம் கட்ட பேச்சுவார்தை நடக்கிறது. இதில் மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 26 பேர் கொண்ட குழு நாளை (இன்று) இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு செல்கிறோம். அங்கு செல்வதற்கான டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டுகள் சரிபார்ப்பதற்காக இன்று ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியை தான் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பேச உள்ளோம். என்ன கோரிக்கை பேச போகிறோம் என்பது அங்கு போய் தான் முடிவெடுப்போம். இப்போது கூறுவதற்கு இல்லை. தற்போது எங்களிடம் கோரிக்கை எதுவும் இல்லை. அதேநேரம் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில் இரு நாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடிப்பதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க கூடாது. இதுதொடர்பாக பேச உள்ளோம். 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமுக உடன்பாடு எட்டும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ்.சித்திரவேலு மற்றும் எம்.ஜெகநாதன்; தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பி.ராஜமாணிக்கம்; புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த என்.குட்டியாண்டி மற்றும் ஜி.ராமகிருஷ்ணன்; ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜேசுராஜா, யு.அருளானந்தம், எம்.எஸ்.அருள், எஸ்.பி.ராயப்பன் மற்றும் என்.தேவதாஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள். மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பாக எம்.இளங்கோ உட்பட 17 மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை செயலர் ச.விஜயகுமார், இயக்குநர் ச.முனியநாதன், கூடுதல் இயக்குநர் க.ரெங்கராஜூ, இந்திய அரசு சார்பாக மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் சுசித்ரா துரை மற்றும் துணைச் செயலர் மயங்க் ஜோஷி உட்பட 9 பேர், ஆக மொத்தம் 26 பேர் கலந்து கொள்கின்றனர். இலங்கை அரசு சார்பாக மீன்வளத்துறை டைரக்டர் ஜெனரல் நிமல் ஹெட்டியராச்சி தலைமையில் நடக்கும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், மீன்வள தலைமை இயக்குநர் எஸ்.சுபசிங்கே, மீன்வள மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் நிவான் பெரீஸ், ஸ்டேட் கவுன்சிலர், அட்டார்னி ஜெனரல் அலுவலகம், டபிள்யு.எஸ்.எல்.டிசில்வா மற்றும் பி.எஸ். மிரண்டா, மீன்வள உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply