லிபியாவுக்கு அருகில் படகு கடலில் மூழ்கியதில் சுமார் 40 பேர் பலி
லிபியா கடற்பகுதி வழியே ஆப்பிரிக்காவின் சகாரா பகுதி மக்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று கடலில் மூழ்கியதில் குறைந்தது 40 பேர் பலியானதாகவும், 51 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக லிபியாவின் உள்துறை அமைச்சகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் பாதுகாப்பற்ற கடல் எல்லைகளும், மத்தியதரைக் கடலைத் தாண்டி இத்தாலி, மால்டா போன்ற நாடுகளை எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ள அந்நாட்டின் நிலப்பரப்பும் ஐரோப்பாவை அடைய முயற்சி செய்யும் வடக்கு ஆப்பிரிக்க மக்களுக்கு லிபியாவை பொது வழித்தடமாக மாற்றியுள்ளது. இந்தப் பயணத்திற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1000 டாலருக்கு மேல் சட்ட விரோத குழுக்களிடம் பணம் செலுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டில் லிபியாவை 40 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுவந்த முயம்மார் கடாபி பதவி இறக்கப்பட்டு கொல்லப்பட்டதிலிருந்து அந்நாடு இன்னமும் போராளிகளின் பிடியில் சிக்கித் திணறி வருகின்றது. அந்நாட்டின் ராணுவம், கடற்படை, ரோந்துப்பிரிவு போன்றவை இன்னமும் பயிற்சிப் பணியிலும், முழுமையாக ஆயுத பலம் பெறாத நிலையிலும் இருப்பதால் மேற்கத்திய நாடுகளின் உதவியை எதிர்நோக்கி லிபிய அரசு செயல்பட்டு வருகின்றது.இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சட்ட விரோத குழுக்கள் ஐரோப்பாவிற்கு குடியேற விரும்பும் மக்களை முறையற்ற வழியில் அனுப்ப இந்தத் தடத்தைப் பயன்படுத்துகின்றன. கடந்த மார்ச் மாதம் இவ்வாறு மத்தியதரைக் கடல் பகுதியில் வந்து ஆபத்தில் சிக்கிய 4000 அகதிகளை நான்கு நாட்களில் சிசிலியின் தெற்குப் பகுதியில் இத்தாலிய அரசு காப்பாற்றியுள்ளது இங்கு குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply