இலங்கைக் கடற்பரப்பினுள் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க முடியாது : டொக்டர் ராஜித சேனாரட்ன
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாட்டு இராஜதந்திரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன எத்தகைய மட்டத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கு இரு தரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதை விட இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையே நடத்தப்பட வேண்டும் என கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை புதுடில்லியில் முதற்கட்டமாக நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி எதுவும் பேசாமல் மெளனம் காக்கப்படுகிறது.
எனவே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் புதுடில்லிக்கு உணர்த்தியுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரு தரப்பு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையாக இருந்தாலும். இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையாக இருப்பினும் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறோம் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
இலங்கை – தமிழக மீனவர்களுக்கு இடையே இரண்டாவது கட்டமாக கொழும்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள் இந்திய தேர்தல்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என சென்னையில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை. இலங்கை வந்திருந்த தமிழக மீனவர்கள் இரண்டு குழுக்களாக நாடு திரும்பினர். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு குழுவினரும். நேற்று மற்றைய குழுவினரும் சென்றனர். புறப்படுவதற்கு முன்னதாக இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்ததாக இந்திய செய்திகள் தெரிவித்தன.
ஆனால் இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள மூன்று வருட காலம் அவகாசம் வேண்டும். அதேநேரம் இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் என தமிழக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை இலங்கை பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கடல் வளங்களை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து அழித்து வாழ்வாதாரத்தை நாசமாக்குவதாகவும் குற்றம் சாட்டினர்.
அதே சமயம். பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வ்நத கடற்பரப்பில் தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் வாதிட்டனர்.
தமிழக – இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ் அரங்கத்தில் தமிழக மற்றும் இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இரு நாட்டு மீன்துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தடைசெய்யப்பட்ட வாருதல் (ஹிரந்லிங்) மீன்பிடி மற்றும் இரட்டைமடி போன்ற மீன் பிடி முறைகளை தமிழக விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பாரம்பரிய பிரதேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த இலங்கை மீனவர்கள் இலங்கை அரசின் சட்டத்தின் படியும் செய்துகொள்ளப்பட்ட சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தத்தின் படியும் எல்லை தாண்டி மீன்பிடிப்பது முற்றிலும் தவறானது என்பதை இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் நாடு திரும்பியுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இந்தப் பிரச்சினையை மத்திய அரசே தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித் துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply