பா.ஜ.க கூட்டணிக்கு அமோக வெற்றி புதிய பிரதமராக நரேந்திர மோடி 21ம் திகதி பதவியேற்பு வைபவம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பதுடன், கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்தியாவின் 15வது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 330க்கும் அதிகமான தொகுதிகளை பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்கிறது.

ஆட்சியமைப்பதற்கு 272 பெரும்பான்மை ஆசனங்கள் தேவையென்ற இலக்கையும் தாண்டி பா.ஜ.க. தனித்து 280ற்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சுமார் 59 தொகுதிகளையும் ஏனைய கட்சிகள் 147 தொகுதிகளையும் பெற்றுள்ளன.

எந்தவொரு மாநிலக் கட்சியின் ஆதரவுமின்றி ஆட்சியமைக்கும் பலத்தை பா.ஜ.க. கொண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் அ.இ.அ.தி.மு.க.வின் ஆதரவின்றி ஆட்சியமைப்பதற்கு போதியளவு ஆசனங்களை பா.ஜ.க. கொண்டுள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிட்ட வதோத்தரா மற்றும் வாரணாசி ஆகிய தொகுதிகளில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்கு வித்தியாசத்தால் அமோக வெற்றி பெற்றுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந் திரமோடி பதவியேற்கவுள்ளார். வதோத்தரா தொகுதிக்குச் சென்று தனது வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு, தற்பொழுது அவர் வகித்துவரும் குஜ்ராத் முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு மோடி, புதுடில்லி செல்லவுள்ளார். 21ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதென தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்த நிலையில், இதனைப் பொய்ப்பிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிப்பெரும்பான்மையுடன் இந்திய மத்திய அரசாங்கம் ஆட்சியமைக்கிறது. 84ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 415 தொகுதிகளைப் பெற்றிருந்தது. அதன் பின்னர் முதல் முறையாக ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், எதிர்வரும் நாட்கள் சிறப்பானதாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

பாரதத்தின் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பல பகுதிகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க தலைவர் வை.கோ, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்களின் ஆத்திரமே இந்தத் தேர்தல் முடிவின் செய்தியாகும் என பா.ஜ.க சிரேஷ்ட தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

மோடியின் வெற்றியானது நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் என நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடி நேற்று தனது தாயாரைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். தனது ஆசி எப்போதும் மகனுக்கு உண்டு என அவர் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

அதிக வாக்கு வித்தியாசங்களால் வெற்றிபெற்றவர் என்ற சாதனையை 22,374 வாக்குகளால் மோடி தவறவிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ராம்விலாஸ் பஸ்வான், சி.பி.எம். கட்சியின் அனில் பாசுவுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வாக்குகளால் வெற்றிபெற்றவர் வேட்பாளர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசங்களால் வென்ற 3ஆவது வேட்பாளராக நரேந்திரமோடி காணப்படுகிறார்.

தேர்தல் முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. 59 தொகுதிகளை மாத்திரமே காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது. தமது கட்சியின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருப்பதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியின் உபதலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் நேற்று தெரிவித்தனர்.

இந்தத் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி மாத்திரம் பொறுப்பல்ல என்றும், அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமட் கூறியுள்ளார்.

தேர்தலில் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. எனினும், இந்தளவு மோசமாகத் தோல்வியடைவோம் என்பதை எதிர்பார்க்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply