தெற்கு சூடான் அகதிகளின் பராமரிப்புக்கு அமெரிக்கா 5 கோடி டாலர் நிதியுதவி

தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானிலிருந்து பிரிந்து தனி நாடு என்ற அந்தஸ்தினைப் பெற்றது. இந்த நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரால் தூண்டிவிடப்பட்ட அரசு எதிர்ப்புப் போராட்டம் கடந்த டிசம்பரில் இருந்து தீவிரமடைந்துள்ளது. இதனை முறியடிக்க அந்நாட்டின் அதிபர் சல்வார் கிர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நீடித்து வருகின்றது. முன்னாள் துணை அதிபர் சதி முயற்சியின் மூலம் வன்முறையைத் தூண்டி விட்டு நாட்டை அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றார் என்று அதிபர் சல்வார் கிர் குற்றம் சாட்டி வருகின்றார்.

நாட்டின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளான யூனிட்டி மற்றும் அப்பர் நைல் ஸ்டேட் பகுதிகளில் உள்ள நகரங்களிலிருந்து புரட்சியாளர்களை விரட்டும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இங்கு தொடரும் வன்முறைகளும், அமைதியின்மையும் நாட்டின் உயிர் நாடியான பொருளாதார வளத்தைப் பாதித்து விடக்கூடும் என்ற அச்சம் அரசுக்குத் தோன்றியுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் தெற்கு சூடான் நாட்டின் சில பகுதிகள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டையினால் தனிமைப்படுத்தப்பட்ட யுனிட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளனர். ஜோங்லெய், அப்பர் நைல் போன்ற பகுதிகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக வன்முறைகள் அதிகரித்துள்ளதால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிருக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதுதவிர, சுமார் 3 லட்சம் பேர் எத்தியோப்பியா, சூடான், உகாண்டா ஆகிய நாடுகளில் அக்திகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்வதற்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தெற்கு சூடான் அகதிகளின் நிவாரணத்துக்காக 50 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply