வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசு தடையாக உள்ளதா? : அமைச்சர் டக்ளஸ் 

வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடையாக உள்ளதா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு வடமாகாண ஆளுநரும், மத்திய அரசாங்கமும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருவதாகவும், இது உண்மையா? பொய்யா? என்பது குறித்து பகிரங்க விவாதமொன்றை சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சகல அதிகாரங்களும் இருக்கின்றன. வடக்கு, கிழக்கில் எம்மிடமிருக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களைவிட ஏனைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்துள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் யாழ் மாவட்டத்தில் எம்மிடமிருக்கும் 4 உள்ளூராட்சி சபைகளைவிட ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கூட்டமைப்பினரிடம் உள்ளது. இதனைவிட அரிய வாய்ப்பான வடமாகாணசபையின் அதிகாரமும் அவர்களிடம் உள்ளது.

இத்தனை அதிகாரங்களையும் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையென பொய்யுரைத்து வருகிறது. வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க வடமாகாண ஆளுநரும், மத்திய அரசாங்கமும் தடையாக இருப்பதாகவும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. இது உண்மையா? பொய்யா? என்பது குறித்து பகிரங்க விவாதமொன்றுக்கு நான் தயாராக உள்ளேன்.

அதேநேரம், போதை ஏற்றும் வார்த்தைகளை உணர்ச்சி பொங்க பேசி வாக்குறுதிகளை போதைப்பொருளாக அள்ளிவழங்கி, தமிழ் பேசும் மக்களை தொடர்ந்தும் தமது வெற்றி வீர மயக்கத்தில் வைத்திருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனவு கண்டு வருகிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் தாம் மட்டும் தனியாக பேச வேண்டும் என்ற தமது ஏகபிரதிநிதித்துவ கூச்சல் ஓய்ந்துவிடும் என்றும், பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சமடைந்துள்ளது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தியிரு க்கும் அரசாங்கம் போதைவஸ்து பாவனைக்கோ அல்லது விநியோகத்துக்கோ ஒருபோதும் துணைபோகாது. போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போதைவஸ்து வியாபாரத்தில் இருந்து கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தில் சுயலாப அரசியல் நடத்திக்கொண்டு இன்று பாராளுமன்றத்தில் போதைவஸ்தை எதிர்ப்பது போல் நாடகமாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply