இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 14 இலங்கை மீனவர்கள் கைது

தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘வைபவ்’ என்ற ரோந்து கப்பலில், கமாண்டர் சஞ்சீவ் திரிக்கா தலைமையில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 53 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்குள் 3 படகுகள் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை ரோந்து கப்பல், அந்த பகுதிக்கு விரைந்து சென்றது. அங்கு கவிசாதுவா, தேவ்மணி, செயிண்ட் பீட்டர் என்ற பெயர்களைக் கொண்ட 3 விசைப்படகுகளை கடலோர காவல் படையினர் மடக்கிப்பிடித்தனர்.

அந்த படகுகளில் மொத்தம் 14 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தததும் தெரியவந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

இலங்கையில் நீர்க்கொம்பு பகுதியைச் சேர்ந்த அண்டன் தில்சான் (வயது 32), அந்தோணி நிகால் (50), அசங்ககுமார் (35), ஜேசுதாஸ் (28), வசந்தகுமார் (36), ஜிவேந்திரா பர்னாந்து (46), கே.எஸ்.சதுரங் (22), குமார் பெரைரா (36), சிட்னி (53), சிரான் (38), புருனோ (41), அஜித் பங்கிரஸ் (40), ஜோசப் நிகேல்ராஜ் (53), சுப்பிரமணியன் தர்மராஜ் (38) ஆகிய 14 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். 3 படகுகளையும், அதில் இருந்த சுமார் 1½ டன் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

14 மீனவர்களையும் நேற்று காலையில் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் ஒப்படைத்தனர்.

கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply