வெளிநாடுகளில் வசிக்கும் 20 இலட்சம் இலங்கையர்களுக்கு வாக்களிக்க வசதி : மஹிந்த தேசப்பிரிய
வெளிநாடுகளிலுள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வாக்களிப்புக்கான வசதிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நாட்டில் மொத்தமாக 150 இலட்சம் வாக்காளர்கள் உள்ள போது 20 இலட்சத் துக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் வாக்களிக்க வாய்ப்பின்றி உள்ளனர். இது தொடர்பிலான சட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் தேர்தல் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு அந்தந்த நாடுகளில் இருந்தவாறே வாக்க ளிக்கும் வசதிகளை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளமையைச் சுட்டிக் காட்டிய தேர்தல் ஆணையாளர் நம்மவர்கள் 20 இலட்சம் பேர் தேர்தல்களில் வாக்களிக்காமல் இருப்பதென்பது அவதானத்திற்கொள்ள வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்று தேர்தல் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்:
2014ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு திருத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
இதற்கிணங்க வாக்காளர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்கின்ற பி. சீ. படிவங்கள் இம்மாதம் 16ம் திகதி முதல் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த படிவங்களை மீளப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 2ம் திகதி ஆரம்பிக்கப்படும். இந்த நடவடிக்கை ஜுலை 15ம் திகதி வரை முன்னெடுக்கப்படும். வாக்காளர்கள் இறுதி வரை தாமதிக்காமல் துரிதமாக தமது விண்ணப்பப்படிவங்களை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை: வாடகை வீடுகளில் வசிப்போரும் வாக்களிக்கும் உரிமை உடையவர்கள். அவர்களும் படிவங்களைப் பூர்த்திசெய்து மீள கையளிக்க வேண்டும். பிரதான குடியிருப்பாளர்கள் அதற்குத் தடையாக இருந்தால் அது குற்றமாகும்.
தங்களது பெயர்களை தேர்தல் இடாப்பில் பதியத் தவறுபவர்களுக்கு வாக்களிப்புக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை தேர்தல் திணைக்களம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. எனினும் சிலர் இது தொடர்பில் அலட்சியமாக இருந்து விட்டு இறுதி நேரத்தில் எம்மிடம் முறையிடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களைப் பதிய வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. இது தொடர்பில் தெளிவூட்டும் நடவடிக்கைகளை இம்முறையும் தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியை வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தி நுவரெலியா, புத்தளம், கிளிநொச்சி, அம்பாறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நடை பவனிகள், துண்டுப்பிரசுர விநியோகம், வீதி நாடகங்கள் போன்ற விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச கிராம சேவை அதிகாரிகள் ஆகியோரின் ஏற்பாட்டில் வாக்காளர்களைத் தெளிவூட்டும் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்த ப்படவுள்ளன.
கல்வியமைச்சு மற்றும் மாகாண கல்வியமைசுக்களின் உதவியுடன் பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகளில் அதிபர்கள் மூலமாக மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. அதனூடாக பெற்றோர்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் காரணமாக மாற்று இடங்களில் குடியிருப்போர் தமது பெயர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்வதற்கு எத்தகைய தடைகளும் கிடையாது. அதேபோன்று வாடகை வீடுகளிலுள்ளோரும் வாக்களிப்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அவர்கள் அறிந்து செயற்படவேண்டும்.
அத்துடன் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளான மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் தொழிலுக்காக கொழும்பில் தங்கியுள்ளனர். சிலர் ‘லொட்ஜ்’களிலும் தங்கியுள்ளனர். இவர்களைத் தேர்தல் இடாப்பில் பதிவு செய்வதற்கு முடியாத நிலை உள்ளது. இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டோரே வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளதால், சில சமயங்களில் 18 வயதிற்கு இரண்டு மாதங்கள் அல்லது அதற்குக் குறைந்த காலமே இருந்தாலும் அத்தகைய இளைஞர், யுவதிகள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் இதுபோன்ற நிலைமைகளை எதிர்நோக்க நேர்கிறது. அதனால் தேர்தல் நடக்கும் அந்த வருடத்தில் 18 வயதை நிறைவு செய்வோர் வாக்களிக்க முடியும் என்ற நிலைமையை தற்போது தேர்தல் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் நன்மையடைவர் எனவும் தேர்தல் உயர் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொகமட் உட்பட மேலதிக செயலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply