மஹிந்த அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன்
இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில், இலங்கை ஜனாதிபதியின் அழைப்பையேற்று கலந்துகொள்ள முடியாதிருப்பதாகவும், அதற்காக வருந்துவதாகவும் வடமாகாண முதலமைச்சர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தனது குழுவினருடன் வந்து கலந்துகொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பு கடிதம் வடமாகாண முதலமைச்சருக்கு தொலைநகல் மூலம் வெள்ளியன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பையடுத்து, வடமாகாண அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்ததன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு பதில் அனுப்பியுள்ளார்.
“ஜனாதிபதியின் அழைப்பை ஏற்காததற்கு முக்கிய காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதேயாகும்.
எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதற்றத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாணசபையைப்பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும்.
இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால், உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். ஆகவே இந்த அழைப்பை ஏற்க முடியாதிருக்கின்றது”
என அக்கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply