கம்யூனிஸ்டு இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்: தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.டி.கே.தங்கமணி நூற்றாண்டு விழா மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரையில் நடந்தது. கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன், சுதந்திர போராட்ட தியாகி மாயாண்டிபாரதி ஆகியோர் கே.டி.கே.தங்கமணி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது குறித்து பேசினர்.

மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசும் போது கூறியதாவது:-

கே.டி.கே.தங்கமணி லண்டனில் சட்டப்படிப்பை படித்தவர். மிகப்பெரிய கோடீசுவரர். இருந்தபோதிலும் கம்யூனிஸ்டு இயக்கத்துக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர். தனது கடைசி மூச்சு உள்ளவரை கம்யூனிஸ்டு தோழர்களோடு இணைந்து போராடியவர். பல தொழிற்சங்க போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி கண்டார். இளைய தலைமுறையினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடம்.

இந்த ஆண்டு முழுவதும் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும். தொழிலாளர்களுக்காக போராடிய அவரது அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக தொகுத்து நூலாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.

1948, 1964–ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டு இயக்கம் பின்னடைவை சந்தித்தது. அந்த பின்னடைவில் இருந்து தற்போது வரை கம்யூனிஸ்டு இயக்கங்கள் மீளவில்லை. எனவே, கம்யூனிஸ்டு இயக்கங்கள் ஒன்றுபடுகிற நிலையை நோக்கி முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply