தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சி, அடுத்த மாதம் ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை மூன்று பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதம் ஆகிய நிகழ்வுகள் சிலநாட்கள் மட்டுமே நடைபெற்றன.

பாராளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள் அப்போது ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் அடுத்த மாதம் ஜூன் இரண்டாம் வாரத்தில் ஒரு நாளில் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை தொடர்பான சில குழு உறுப்பினர்களை நியமித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். சட்டசபையின் 2013-14-ம் ஆண்டுக்கான அலுவல் ஆய்வுக்குழுவின் உறுப்பினர் பதவியில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு பதிலாக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

2013-14-ம் ஆண்டுக்கான பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பதவியில், எதிர்கட்சி முன்னாள் துணைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பதிலாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு உறுதி மொழிக்குழு தலைவராக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) ஏ.கே.போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்த பதவியில் இருந்த உதயகுமார் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply