இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் :பான் கீ மூன்
இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் கோரியுள்ளார். இலங்கை மோதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்குள் தொண்டர் அமைப்புகள் நிவாரண பணிகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தளத்தில், அதன் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் மோதல்களை நிறுத்தி, வடக்கில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொது மக்களை அங்கிருந்து வெளியேற்ற உதவி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என பான் கீ மூன் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
அதேவேளை கடந்த 23 ஆம் திகதி போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப்புலிகள் அறிவித்தனர். அதனை நிராகரித்த அரசாங்கம், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதி மீது மேற்கொள்ளப்படும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதபிமான விவகாரங்களுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலய பகுதியில் ஏராளமான பொதுமக்கள் இருப்பதாகவும் அவர்கள் உணவின்றி உயிரிழப்பது குறித்தும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply