உக்ரைன் அதிபர் தேர்தல் போரோஷென்கோ வெற்றி

உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான போரோஷென்கோ (48) முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “உக்ரைனில் போர், குழப்பம், குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவதுடன் நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

ஐரோப்பாவுடன் வலுவான உறவுகளை மேற்கொள்ள ஆதரவளிப்பதாகவும், அதே வேளையில் ரஷியாவுடனான உறவினை சீர்படுத்த விரும்புவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தனது முதல் நடவடிக்கையாக உக்ரைனின் கிழக்குப் பிராந்திய தொழில் நகரான டொன்பாஸýக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், உக்ரைனில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது அரசு விரும்புகிறது என்றும் போரோஷென்கோ கூறினார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் போரோஷென்கோ 54 சதவீத வாக்குகளைப் பெற்றார். முன்னாள் பிரதமர் யுலியா 13 சதவீத வாக்குகளைப் பெற்று 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

எனினும், “”தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படும்” என்று உக்ரைன் தேர்தல் ஆணைய தலைவர் மைக்காலோ ஒகென்டோவ்ஸ்கி தெரிவித்தார்.

விமான நிலையம் மூடல்: இதனிடையே, டொனெட்ஸ்க் நகர் விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஏ.டி.பி. செய்தியாளரிடம் டொனெட்ஸ்க் விமான நிலையச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோ கோசினோவ் கூறியதாவது:

டொனெட்ஸ்க் விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஆயுதம் ஏந்திய ஒரு குழுவினர் வந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தாமல், அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். பாதுகாப்பு வீரர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெளியேறிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மதியம் 12.30 மணி முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது விமான நிலையம் முழுவதும் ஆயுதம் ஏந்திய குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இந்தக் குழுவினர், உக்ரைனில் இருந்து விடுதலை பெற்ற டொனெட்ஸ்க் குடியரசின் பிரிதிநிதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று டிமிட்ரோ கோசினோவ் கூறினார்.

அதிபர் தேர்தலுக்கு எதிர்ப்பு: உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், கிழக்குப் பிராந்தியத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவிடாமல் கிளர்ச்சியாளர்கள் தடுத்துவிட்டனர். எனினும், நாடு முழுவதும் பதிவான வாக்குகளைக் கொண்டு எண்ணப்பட்ட முதல் சுற்றில், பெட்ரோ போரோஷென்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிளர்ச்சியாளர்களின் தளபதிகள் கூறுகையில், “”தொழிலதிபர்களுக்கு சாதகமாக உக்ரைனின் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அங்கீகரிக்க மாட்டோம். இதனை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்” என்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply