வீரவன்சவுக்கு முதுகெலும்பு இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் : விக்கிரமபாகு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் ஜே.வி.பி.யினர் போன்ற இனவாத சக்தியினர் மீளவும் ஒன்றிணையவுள்ளனர். அதன் பிரகாரம் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக விமல் வீரவன்சவை களமிறக்கும் வாய்ப்புள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை – கல்கிசை நகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு முதுகெலும்பு இருக்குமேயானால் அரசிலிருந்து வெளியேறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சவால் விடுக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் நேற்று நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசிற்கு எதிராக மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் வீதியிலிறங்கி போராட முன்வந்துள்ளனர். இதன் பிரகாரம் இவ்வரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்நிலையில், சாதாரண மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் பெறுவதற்காக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசு மூக்கை நுழைக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எல்லா சந்தர்ப்பத்திலும் குற்றச்சாட்டுகளை சுமத்தும் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது மௌனியாக இருக்கிறார். நாணய நிதியத்தின் மின் ஆழியை இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிய விமல் வீரவன்சவினைப் போன்று தற்போது எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கோரி வருகிறார்.
தற்போது, ரணில் விக்கிரமசிங்க இடதுசாரி கொள்கையுடையவரை போன்று செயற்படத் தொடங்கியுள்ளார். இதே உற்சாகமும் அவரது போக்கும் கட்சி பீடமேறிய பின்பு எவ்வாறு இருக்கும் என்று கூற முடியாது.
இத்தகைய நிலையில் தனது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்வதற்கான அரசு முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. தற்போது அரசுக்குள் உட்பூசல் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
இதற்கமைய அமைச்சர்களன சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் அரசிற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் பாட்டலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகிய இனவாதக் குழுவினர் மீளவும் ஒன்றிணையும் சாத்தியம் உள்ளன. அவ்வாறு ஒன்றிணைந்தால் அரசின் வாக்கு வங்கியே குறைவடையும்.
அத்துடன் ஒன்றிணையவுள்ள இக்குழுக்கள் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளன. அவ்வாறு போட்டியிட்டால் அதன் ஜனாதிபதி வேட்பாளர்களாக விமல் வீரவன்ச களமிறங்கும் வாய்ப்பே அதிகமாகவுள்ளது.
எனவே, அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு முதுகெலும்பு இருக்குமேயானால் அரசிலிருந்து வெளியேறி தனக்கென்று கொள்கையினை உருவாக்கி வீதியிலிறங்க வேண்டும். அத்துடன் நடத்தவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply