முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதற்கு தீய சக்திகள் சூழ்ச்சி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை
தேசிய ஒற்றுமைக்காகவும், தேசிய பொருளாதாரத்துக்காகவும் பரந்தளவில் பங்களிப்பு நல்கின்ற இலங்கை முஸ்லிம்களின் சகோதர மக்களுடனான ஒற்றுமையையும், பொருளாதாரத்தையும் சீரழித்து சின்னாபின்னமாக்குவதற்கு கடைசி உபாயமாக பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை செயற்கையாக தோற்றுவித்து, முஸ்லிம் – சிங்கள நல்லுறவை அடியோடு இல்லாம லாக்கும் முயற்சியில் சில தீய சக்திகள் முயன்று வருகின்றமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளுத்கமவிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற சகோதர இன வாடிக்கையாளர்கள் – வர்த்தக நிலைய தாரர்களினால் பாலியல் தொந்தொரவுக்கு உள்ளானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காண்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பதுளையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான ஜவுலிக் கடைக்குள் ஆடைக் கொள்வனவுக்காகச் சென்ற யுவதி ஒருவர் ஆடையை அணிந்து பார்த்து சரிபார்க்கும் அறைக்குள் சென்று திரும்பி வந்துதான் படம் பிடிக்கப்பட்டதாக அபாண்டமான முறையில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் தொடர்பான இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையையும். பின்புலமும் என்னவென்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவத்தில் கூட பாலியல் ரீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. கடையை மூடுமாறு கோரிக்கை விடுத்து பிக்கெட்டிங் செய்யப்பட்டது. மறுநாள் கடையும் முற்றாக எரிக்கப்பட்டது. பதுளைச் சம்பவத்தில் கூட சம்பவம் நடந்தவுடனேயே கூட்டம் கூட்டமாக வந்து பெரும்பான்மை இன சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவும், எதிர்ப்பு காண்பிக்கவும், உடனடியாகவே கிடைக்கும் பின்புலமும் ஆதரவும் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையிலான சதித்திட்டம் போன்றே காணப்படுகின்றது.
பெஷன்பக், அளுத்கம, பதுளை ஆகிய சம்பவங்கள் அனைத்தும் பாலியல் தொந்தரவு என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், பொருளாதாரத்துக்கும் நேரடியாக விடுக்கப்பட்ட சதிச்சவாலாகும். எந்தச் சம்பவங்கள் தொடர்பிலும் குறிப்பாக அளுத்கம. பதுளைச் சம்பவங்களில் பொலிஸாரின் பாராமுகமான செயற்பாடுகள் முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான கவலைகளை தோற்றுவித்துள்ளன.
சி.சி.டி.வி. கெமரா பதிவுகளில் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கின்ற சம்பவம் தொடர்பான எத்தகைய பதிவுகளும் கிடையாது. வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட பிரச்சினைகளை மையமாக வைத்துக்கொண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடச்செய்கின்ற அல்லது முற்றாக நிர் மூலமாக்குகின்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்ற பின்புலத்தில் இருந்து செயற்படுகின்ற எவராயினும் அத்தகையோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று பொலிஸ்மா அதிபரை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நாட்டு முஸ்லிம்கள், ஹலால் விவகாரம் முதல் பள்ளிவாசல்கள் அப்புறப்படுத்தும் அனைத்து முயற்சிகள் தொடர்பிலும் உளரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஆவேசமடைந்து பொறுத்துக்கொள்ள முடியாத பொறுமையை கடைப்பிடித்து வருகின்றனர். இருந்த போதும் அதனை சீண்டுகின்ற முயற்சி தொடர்கிறது. அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டுகின்ற முஸ்லிம்களின் பொறுமையை எவரும் உரசிப்பார்க்க முனையத்தேவையில்லை. பண்டு தொட்டு பன்னெடு காலமாக இருந்து வருகின்ற பண்பாட்டையும், பண்பாட்டு வளர்ச்சியையும் வர்த்தக போட்டி சீரழித்து விடக்கூடாது. முஸ்லிம்களுக்கு எதிராக சமூக பொருளாதார தீங்குகளை ஏற்படுத்துகின்ற பெரும் பான்மை இன கடும்போக்கு வாதிகள் பிறரை தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply