இலங்கையின் அனுமதியில்லாமல் எந்தவொரு விசாரணையையும் ஐ. நா குழு செய்ய முடியாது மனித உரிமைகள் சட்டத்தரணி மஹாநாம

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி யில்லாமல் ஐ. நா குழுவினால் எந்தவொரு விசாரணையையும் இலங்கையில் முன்னெடுக்க முடியாதென மனித உரிமைகள் சட்டத்தரணி பிரதீப மஹாநாம தெரிவித்தார். ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை, நியூசிலாந்தைச் சேர்ந்த சர்வதேச சட்டத்தரணியான டேம் சில்வியா கார்ட்ரைட் தலைமையிலான குழுவை இலங்கையில் மோதல் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமித்துள்ளார்.

இந்த விசாரணைக் குழுவானது உண்மையில் முன்னாள் புலி உறுப்பினர்களும் புலி ஆதரவாளர்களுமான தமிழ் டயஸ்போராக்கள் நிறைந்து வாழும் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முன்னெடுக்கப்படவேண்டியதொன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைக் குழுவினால் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கை 2015 ஆம் ஆண்டளவில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. சில அரசியல்வாதிகள் கூறுவது போல் இறுதி அறிக்கைக்கும் பொருளாதாரத் தடைக்கும் எவ்வித தொடர்புமில்லை.

இதேவேளை, இறுதியறிக்கை ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்வேளை, அதன் ஆணையாளர் நாயகமாக நவநீதம் பிள்ளை பதவி வகிக்க மாட்டார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறதெனவும் மஹாநாம தெரிவித்தார்.

ஐ. நா வட்டாரங்களிலிருந்து தெரிய வருவது போல ஐ. நாவுக்கான ஜோர்டான் நாட்டின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான இளவரசர் செயிட் ராட் செயிட் அல் ஹுசேன் மனித உரிமைகள் ஆணையாளராக தெரிவாகும் பட்சத்தில் விசாரணை செயற்பாடுகளில் இலங்கைக்கு சாதகமான முடிவுகள் கிட்டுமென எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் கூறினார்.

‘அநேகமான அரபு நாடுகள் பயங்கரவாதத்தின் கொடூரத்தை நன்கு அறிந்தவர்கள். அந்நாட்டைச் சேர்ந்தவர்களால் பயங்கரவாதத்தின் கொடூரம் மற்றும் அவை சமாதானம், நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நன்கு உணரக்கூடியதாகவிருக்கும். எனவே புதிதாக தெரிவாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பாரென நம்வுவதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply