ஐ.நா. குழுவின் விசாரணைகளில் உண்மைத் தன்மை இல்லையென்பதற்காகவே வருகையை எதிர்க்கிறோம் : அமைச்சர் டலஸ் 

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணைக்குழுவினை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என்பது தொடர்பில் அதியுயர் சட்டவாக்கல் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தினால் எடுக்கப்படும் தீர்மானத்தை மீறி எவராலும் எதனையும் பலவந்தமாக செயற்படுத்த முடியாதென இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தினகரனுக்குத் தெரிவித்தார். இத்தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் தயங்காமலும் பின்வாங்காமலும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளை இலங்கை எதிர்க்கவில்லையென சுட்டிக் காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தக் குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் உண்மையில்லை என்பதற்காகவே இதனை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என்ற உறுதிபாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயும் பொருட்டு இலங்கைக்கு விசாரணைக்குழுவொன்றை அனுப்பி வைக்க விருப்பதானது தேசிய பிரச்சினையேயொழிய தனிப்பட்ட கட்சி விவகாரமில்லை என்பதனை அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் புரிந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது செயற்திறனையும் பலத்தையும் உறுதிபடுத்தும் நோக்கில் தனித்து நின்று வெவ்வேறு நோக்கங்களுக்காக செயற்படாது தேசிய ரீதியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் வலியுறுத்தி னார்.

இது கட்சிகளுக்கிடைப்பட்ட விவகாரமல்ல என்பதனால் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சிகளின் பெயர்கள் மற்றும் பிரதேசவாதத்தை மறந்து இலங்கையர்களென்ற நிலைப்பாட்டுடன் பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானத்தினை வெற்றிகரமாக நிறைவேற்ற முன்வர வேண்டியது கட்டாயமெனவும் அமைச்சர் கூறினார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இலங்கையிலும் ஜெனீவாவிலுமுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்புகளை ஆர்ப்பாட்டமாகவும் ஊர்வலமாகவும் வெவ்வேறு வழிகளில் முன்வைத்திருந்தனர். இத்தகைய எதிர்ப்புக்களை பாராளுமன்றத்தில் தமக்குரிய வாக்குப் பலத்திற்கூடாக நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியுமா என்று எதிர்க் கட்சியினர் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாட்டின் அதியுயர் சட்டவாக்கல் சபையான பாராளுமன்றத்தினால் எடுக்கப்படும் தீர்மானத்தினை மீறி எவராலும் எதையும் செய்ய முடியாது. பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் ஆவர். இவர் களால் நிறைவேற்றப்படும் தீர்மானம் நாட்டு மக்களின் குரலாகவே சர்வதேசத்தில் ஒலிக்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே, இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட தருஸ்மன் அறிக்கையில் எந்தவொரு உண்மைத் தரவுகளும் இல்லை. எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவி பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழு இலங்கையில் யுத்தக் குறற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய விருப்பதற்கும் ஏதோவொரு உள்நோக்கமிருப்பது தெளிவாகிறது.

எனவே, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இதனை நன்கு விளங்கியவர்களாக அநீதியானதும் பக்கச் சார்பானதுமான விசாரணைகளை தடுத்து நிறுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் தமது வாக்குப் பலத்தை பயன்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் அழகப்பெரும கேட்டுக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply